Vaazhai Movie : ‘வாழை’க்கு திருமாவளவன் வாழ்த்து.. மாரி செல்வராஜின் வீட்டில் விருந்து..
Thirumavalavan Visit Mari Selvaraj House After Watch Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Thirumavalavan Visit Mari Selvaraj House After Watch Vaazhai Movie : இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது படைப்பாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘வாழை’. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை தொடர்ந்து வெளியான இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் வாழை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாம, திரைத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் கூட வெகுவாக பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பாலா, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான், நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.
படத்தின் கதாபாத்திரங்களின் நடிப்பு, சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து துறைகளிலும் வாழை திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சென்று பாராட்டியுள்ளார். அத்துடன் மாரி செல்வராஜுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய திருமாவளவன், பெற்றோர்கள் மற்றும் குழந்தையுடன் உரையாடினார்.
படத்தில் சிறப்பாக நடித்திருந்த சிறுவர்கள் இருவருக்கும், திருமாவளவன் சால்வை அணிவித்து பாராட்டினார். பின்னர், அவர்கள் அனைவருடன் அமர்ந்து திருமாவளவன் உணவு அருந்தினார். மாரி செல்வராஜின் தந்தையை கட்டியணைத்து பாராட்டிய திருமாவளவன், மாரி செல்வராஜுக்கும் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். அதன் பிறகு, குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், “வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுக பற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்” என தெரிவித்துள்ளார். திருமாவளவனுடன் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






