இங்கிலாந்தில் தொடங்கியது பாரீஸ் பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனை இருவரும் தொடங்கி வைத்தனர்.
Paris Paralympics 2024 : சமீபத்தில் தான் பாரிஸ்ஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிறைவடைந்தன. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 117 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 13 நபர்கள், ஹரியானாவில் இருந்து 24 நபர்கள், பஞ்சாப்பில் இருந்து 19 நபர்கள், உத்தரபிரதேசத்தில் இருந்து 7 நபர்கள், கர்நாடகாவில் இருந்து 7 வீரர்கள், கேரளாவில் இருந்து 6 வீரர்கள், மகாராஷ்டிராவில் இருந்து 5 நபர்கள், டெல்லியில் இருந்து 4 நபர்கள், உத்தரகாண்டில் இருந்து 4 நபர்கள், தெலங்கானாவில் இருந்து 4 நபர்கள், ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து 4 நபர்கள், மேற்குவங்கத்தில் இருந்து 3 நபர்கள், மத்தியபிரதேசம், சண்டிகர், குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், ஒடிசா மாநிலங்களில் இருந்து தலா 2 நபர்கள், கோவா, சிக்கிம், பீகார், அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து தலா 1 நபர் என்று மொத்தம் 117 போட்டியாளர்கள் இந்தியாவில் இருந்து பங்கேற்கேற்றனர். ஆனால் இந்த ஒலிம்பிக்ஸில் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கம் என இந்தியா மொத்தம் 6 பதக்கங்களையே வென்றது.
இந்நிலையில், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் வரும் ஆக்ஸ்ட் 28ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இந்த முறை வில்வித்தை, தடகளம், நீச்சல், டேபிள் டென்னிஸ்,ஜூடோ, பளுதூக்குதல், சைக்கிளிங், துப்பாக்கிசுடுதல் உட்பட 12 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
பாராலிம்பிக்ஸில் இந்தியாவில் அதிக அளவிலான வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா 19 பதக்கங்கள் வென்றிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்து ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறும்போது, பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் இந்தியா அணி வீரர்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. இம்முறை 25க்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது உறுதி. அணியில் உள்ள பெரும்பாலானோர் சிறந்த பார்மில் உள்ளனர். பாரிஸ் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளனர். குறிப்பாக தடகளம், பாட்மிண்டன், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் வெற்றியை எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைதுக்கான பின்னணி என்ன?
இந்நிலையில், இங்கிலாந்தில் தொடங்கியது பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். 250 பேர் முன்னிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் கிரிகோர் இவான், வீராங்கனை ஹெலன் ரெய்ன்ஸ்ஃபோர்ட் இருவரும் ஸ்டோக் மாண்டிவைல் என்ற பகுதியில் ஜோதியை தொடங்கிவைத்தனர்.