Vijay Sethupathi : 'அற்புதமான அனுபவம் கிடைக்கும்’.. வாழைக்காக உருகிய விஜய் சேதுபதி...
Vijay Sethupathi About Mari Selvaraj Vaazhai Movie : வாழை திரைப்படத்தை திரையில் கண்ட நடிகர் விஜய் சேதுபதி படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
Vijay Sethupathi About Mari Selvaraj Vaazhai Movie : இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது படைப்பாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘வாழை’. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை தொடர்ந்து வெளியான இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் வாழை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லாம, திரைத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் கூட வெகுவாக பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பாலா, இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இசையமைப்பாளர் ஏ.ஆர்,ரஹ்மான், நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர்.
படத்தின் கதாபாத்திரங்களின் நடிப்பு, சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து துறைகளிலும் வாழை திரைப்படம் சிறப்பாக உள்ளது என்று விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி, படம் குறித்து வெகுவான பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள விஜய் சேதுபதி, “தற்போதுதான் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் பார்த்தேன். மிகவும் அற்புதமான ஒரு திரைப்படம். இன்னமும் அந்த திரைப்படம் முடிவடைந்த மாதிரி தெரியவில்லை. அதற்குள்ளே தான் பயணித்து கொண்டிருக்கிறோம். அதில், அவர் பேசிய அரசியலாகட்டும்.. வசனமாகட்டும்.. நடித்த அனைவருமாகட்டும்..
அந்த ஊரில், அவர்கள் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராகவும் நாமும் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இந்த மாதிரி ஒரு திரைப்படம் எடுத்ததற்கு, இந்த மாதிரி வாழ்க்கையை பதிவு செய்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி..
செய்திகளில் கேட்கும்போதும் அல்லது செய்திதாள்களில் வரும்போதும் தலைப்புச் செய்திகளை படித்துவிட்டு சாதரணமாக கடந்து போய்விடுகிறோம். அதற்கு பின்னால் இருக்கக்கூடிய வாழ்க்கையை, இவ்வளவு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்.. ஒரு அற்புதமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இப்படி ஒரு வாழ்க்கையை தெரிந்துகொள்வது என்பது, நமது வாழ்க்கை மேல், நமக்கே சில கேள்விகளை எழுப்பும் என்று நான் நம்புகிறேன். படத்தை திரையரங்கில் பாருங்கள்.. நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?