Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் படுகொலை நீதி வேண்டும்... அழைப்பு விடுத்த பா ரஞ்சித்... ஜூலை 20ம் தேதி..?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Jul 16, 2024 - 15:22
 0
Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் படுகொலை நீதி வேண்டும்... அழைப்பு விடுத்த பா ரஞ்சித்... ஜூலை 20ம் தேதி..?

சென்னை: அயனாவரம் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் அவரை கொலை செய்த சிசிடிவி வீடியோக்கள் வைரலாகின. இந்தச் சம்பவத்தில் 8 பேர் கைதான நிலையில், அதில் திருவேங்கடம் என்பவரை போலீஸார் என்கவுண்டர் செய்தனர். இரு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்காக திருவேங்கடத்தை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தப்ப முயற்சித்ததால் போலீஸார் என்கவுன்டர் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கண்டம தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும் என இயக்குநர் பா ரஞ்சித் அறிக்கை விடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதும் முதல் ஆளாக மருத்துவமனை சென்ற பா ரஞ்சித், இறுதிச் சடங்கு முடியும் வரையும் உடனிருந்தார். மேலும், இந்த படுகொலை தொடர்பாக தமிழக அரசை கேள்வி எழுப்பும் விதமாக ட்வீட் செய்திருந்தார். அதேபோல், தற்போதும் பா ரஞ்சித் ட்வீட் போட்டுள்ளார். அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி, வரும் சனிக்கிழமை 20ம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள். ஜெய் பீம்!” என பதிவிட்டுள்ளார். 

மேலும், இந்த அழைப்பை ஒரு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார் பா ரஞ்சித். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியலிலும் பொருளாதார விடுதலை அடையவும் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில், அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா!. இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அம்பேத்கரியம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில், ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாக கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல.

சாதி, மதம், இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு தான் நம்பிய தத்துவத்தின் படி வாழ்ந்த ஆம்ஸ்ட்ராங்கின் செயற்பாடுகளை நினைவிலேந்தி, சென்னை ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணி திரள்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளை தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் 20ம் தேதி, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow