முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கியது எப்படி? - புதிய தகவல்கள்
வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை, கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தது எப்படி என்று புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் புகார் மனு அளித்தார் இந்நிலையில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 25ஆம் தேதி ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதை அடுத்து, பத்திற்கும் மேற்பட்ட சிபிசிஐடி தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிபிசிஐடி போலீசார் கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
முன்னதாக வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஐந்து தனிப்படைகள் வட மாநிலங்களுக்கும் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு வந்த நிலையில் கேரள எல்லையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
அவரது செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. வேறு ஒரு எண்ணில் ஆன்லைன் மூலமாக பேசி வந்ததால், அவரை பிடிப்பதற்கு தாமதம் சிபிசிஐடி போலீசாருக்கு தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் எம்.ஆர். விஜய்பாஸ்கர் உறவினருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த நெட்வொர்க்கை வைத்து அவரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாகவும் சிபிசிடிஐ போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி. ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி விசாரணை நடத்த உள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தமிழகம் அனைத்து வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் பின்னர் தமிழகம் அழைத்து வந்து மேற்கு மண்டல சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?