410 ஆசிரியர்கள் பணி நியமனம்.. நீதிமன்ற உத்தரவால் பயனடையப்போகும் பட்டதாரிகள்..

Chennai High Court Order To TN Govt : 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 19, 2024 - 18:20
Jul 20, 2024 - 10:37
 0
410 ஆசிரியர்கள் பணி நியமனம்.. நீதிமன்ற உத்தரவால் பயனடையப்போகும் பட்டதாரிகள்..
410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க உத்தரவு

Chennai High Court Order To TN Govt : கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த 2011ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு  வாரியம் அமைக்கப்பட்டு, அதன்படி 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2014 முதல் 2017 வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து பணி நியமனத்துக்காக, ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் நியமனத்துக்கு ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறையை மாற்றி, போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என, 2018ம்  ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் வழங்கக் கோரி, 410 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2017 ஆம் ஆண்டு பாதியில் கைவிடப்பட்ட ஆசிரியர் தேர்வு நடைமுறை மீண்டும் தொடர்ந்து, தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மனுதாரர்கள் 410 பேருக்கும்  விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், போட்டித் தேர்வு நடத்துவது என்று 2018 ஆம் ஆண்டு எடுத்த முடிவை, எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டுமே தவிர, அதற்காக முந்தைய காலத்தில் துவங்கப்பட்ட தேர்வு நடைமுறையை கைவிட முடியாது எனவும் கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், கடந்த 2014 முதல் 2017 வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்கள் பயனடையப்போவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow