காதலனுக்காக அண்ணனை காரில் கடத்திய காதலி.. போலீஸார் கையில் சிக்கிய கும்பல்
Ranipet Kidnap Case : காதலனை அடைவதற்காக காதலனின் அண்ணனை, காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ranipet Kidnap Case : ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் - குப்பு இவர்களுக்கு ரஞ்சித் (30), சதீஷ் (28) என இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சதீஷ் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கேஸ் கவுண்டரில் பணியாற்றிய வந்துள்ளார்.
அதே ஓட்டலில் பணியாளராக வேலை செய்த சென்னை பெருங்குடி கல்லுட்டை பகுதியை சேர்ந்த சத்தியவாணி (42) இவருக்கு திருமணமாகி கணவருடன் விவாகரத்து ஏற்பட்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஆகையால் சதீஷ்க்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்ததோடு திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சத்தியவாணிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளதும் அந்த இருவரும் தந்தையுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2022 ஆண்டு சதீஷ்க்கு பெண் பார்த்து, செய்யாறு அடுத்த புளிரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபாஷினியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதோடு சுபாசினி தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
ஏற்கனவே சத்தியவாணியை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வரும் சதீஷை தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு சத்தியவாணி கேட்டு இரண்டு முறை வீட்டுக்கு வந்தும் சண்டை போட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 17.07.24 அன்று சத்தியவாணி (42) இவரது தோழிகளான தனலட்சுமி (42) புவனேஸ்வரி (28) இவர்களுடன் மூன்று ஆண்கள் என 6 பேர் கொண்ட கும்பல் சுமோ மூலம் பேச்சுவார்த்தை நடத்த சதீஷ் ஊரான குப்படிசாத்தம் கிராமத்துக்கு காலை 5 மணியளவில் வந்துள்ளனர். அப்பொழுது வீட்டில் சதீஷ் இல்லை என அவரது அப்பா ராமன் சொல்லி சண்டை போட்டு அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுமோவில் வந்தவர்கள் சதீஷின் நிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற சதீஷின் அண்ணன் ரஞ்சித், சத்தியவாணியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால், கத்தி முனையில் வாலிபர் ரஞ்சித்தை, கண்களைக் கட்டி சுமோவில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது
இதனை அறிந்த ரஞ்சித்தின் தந்தை இராமன் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் கடத்திச் சென்றவரை மீட்க சென்னை விரைந்தது.
பெருங்குடி கல்லுகடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் அடைத்து வைத்திருந்த ரஞ்சித்தை அன்றைய இரவே போலீசார் பத்திரமாக மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட சத்தியவாணி, தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலில் உதவியாக இருந்த மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?