சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை சென்னையில் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த விழாவுக்கு முன்பாக, சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டடத்தை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த விழாவின் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னை வந்திருந்தார். ஆனால் நேற்று மதியம் ராகேஷ் பாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ராகேஷ் பால் நேற்று மாலை உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று ராகேஷ் பாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதன்பிறகு ராகேஷ் பாலின் உடல், கடலோர காவல் படையின் தனி விமான மூலம் அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராகேஷ் பாலின் மறைவுக்கு இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மரணம் அடைந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை ஆளுநர் மாளிகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சென்னை மிலிட்டரி மருத்துவமனையில் கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ராகேஷ் பாலின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்'' என்று கூறியுள்ளது.
யார் இந்த ராகேஷ் பால்?
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் பால்,1989ம் ஆண்டு இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பள்ளி துரோணாச்சார்யாவில் துப்பாக்கி மற்றும் ஆயுத அமைப்புகளில் தொழில்முறை நிபுணத்துவம் பெற்றவர். ஐசிஜியின் முதல் கன்னர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மேலும் கமாண்டர் கடலோர காவல்படை மண்டலம் (வடமேற்கு), துணை இயக்குநர் ஜெனரல் (கொள்கை மற்றும் திட்டங்கள்), மற்றும் கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் ஜெனரல் என பல்வேறு பதவிகளில் ராகேஷ் பால் வகித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தில் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பேற்ற ராகேஷ் பால், 2023ம் ஆண்டு கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்றார். ராகேஷ் பால் தலைமையின் கீழ் கடல் வழியாக கடத்தப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடலோர காவல் படை சாதித்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை வீரர்களின் சிறப்பான கடமை மற்றும் தைரியத்துக்காக மத்திய அரசு வழங்கும் தத்ரக்ஷக் பதக்கத்தை ராகேஷ் பால் இரண்டு முறை பெற்றுள்ளார்.