Thangalaan Box Office: 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த தங்கலான்... இது சீயான் விக்ரம் Vibe!
சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆக. 15ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக ஆக.15ம் தேதி வெளியானது. பா ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியிருந்தது தங்கலான். சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் என்பதால், தங்கலானுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இதனால் முதல் நாளில் தங்கலான் படத்துக்கு தரமான ஓபனிங் கிடைத்தது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் 26.44 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது. அதேநேரம் முதல் நாளில் தங்கலான் படத்துக்கு கொஞ்சம் நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. வழக்கமான தனது பாணியில் தங்கலான் படத்தை இயக்காமல், மாய உலகத்தை பின்னணியாக வைத்து மேஜிக்கலாக உருவாக்கியிருந்தார் பா ரஞ்சித். அதுமட்டும் இல்லாமல் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வசனங்கள் புரியவில்லை என்றும் விமர்சனங்கள் வந்தன. மேலும் பா ரஞ்சித்தின் புதுவிதமான திரைமொழி ரசிகர்களுக்கு திருப்தியாக இல்லை.
இதுபோன்ற காரணங்களால் தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க, அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம் தங்கலான் படத்துக்குப் போட்டியாக வெளியான டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. எனவே தங்கலான் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தங்கலான் தற்போது 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.
தமிழில் இந்த மாதம் 15ம் தேதி வெளியான தங்கலான், இந்தியில் வரும் 30ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், தங்கலான் இந்தி ரிலீஸ் செப்டம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இந்தி ரிலீஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சீயான் விக்ரம், பா ரஞ்சித், பார்வதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தங்கலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 100 கோடி ரூபாயை கடந்துவிட்டதாக விக்ரம் அப்டேட் கொடுத்திருந்தார். இந்த வீடியோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள், சீயான் விக்ரமிற்கு இது சூப்பரான கம்பேக் என பாராட்டி வருகின்றனர்.
தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பை ரசிகர்கள் ரொம்பவே பாராட்டியிருந்தனர். முக்கியமாக வட ஆற்காடு வட்டார வழக்கு மொழியை விக்ரம் உட்பட அனைவருமே சிறப்பாக பேசி நடித்தது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. அதேநேரம் ஆடியோ குவாலிட்டி காரணமாக இது புரியவில்லை என ரசிகர்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கலான் இந்தி வெர்ஷன் வெளியான ஓரிரு வாரங்களில், இந்தப் படம் தமிழில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தங்கலான் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






