ஆம்ஸ்ட்ராங் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய விடாத சட்ட விதி..தணிகைச் செல்வன் சொன்ன பிளாஷ் பேக்

சென்னையிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலை சென்னையில் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய சட்ட விதிகளை காரணம் காட்டி மறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகி தணிகைச்செல்வன் கூறியுள்ளார.

Jul 15, 2024 - 11:37
Jul 18, 2024 - 10:50
 0
ஆம்ஸ்ட்ராங் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய விடாத சட்ட விதி..தணிகைச் செல்வன் சொன்ன பிளாஷ் பேக்
Thanigai Selvan

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.பழிக்கு பழியாக நடந்த இந்த கொலையானது வட சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் சென்னைவாசியாக இருந்தாலும் அவரது உடல் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அவரது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதித்தால் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்குவோம் என்று அவரது குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் திடீர் போராட்டத்தில் குதித்தனர். உயர் போலீஸ் அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சியின் ரமாபாய் தலைமை அலுவலகத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடலையும் அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கூறியிருந்தார்.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி தணிகைச் செல்வன், அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு நினைவு கூர்ந்துள்ளார். 

அவரது பதிவில், கடந்த இரண்டாண்டுகளில் பலமுறை அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுடன்  தனிமையில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது பல்வேறு  தகவல்களை அண்ணன் அவர்கள்  எங்களுடன் பகிர்ந்துகொள்வார். அதில் ஒரு தகவல்...விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அவர்கள் கொரானா பெருந்தொற்று காரணமாக இயற்கை எய்தியதை கேள்விப்பட்ட அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்வதற்காக  மருத்துவமனைக்கு சென்றார்...  

அண்ணன் திருமா அவர்கள்  அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் " அக்கா சொந்த ஊரில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார்.  ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சட்ட விதிகளை காரணம் காட்டி  பிரதேதத்தை தர மறுக்கிறார்கள்" என்று வருந்திருக்கிறார். அதனை கேட்டு ஆத்திரமடைந்த  அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்  மருத்துவமனை நிர்வாகத்துடன் சண்டை போட போனதை அண்ணன்  திருமா அவர்கள் தகராறு எல்லாம் வேண்டாம் என தடுத்திருக்கிறார்.. இந்நிலையில் அண்ணன் செ.கு. தமிழரசன் அவர்கள் முதலமைச்சர் நினைத்தால் விதிகளை திருத்தி பிரேதத்தை கொடுக்கலாம் என்று தன்னிடம்  சொன்னதை நினைவுடுத்திய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அப்போது அங்கே வந்த அண்ணன் செல்வப்பெருந்தகையிடம் இந்த தகவலை கூறியிருக்கிறார்...

அண்ணன் செல்வபெருந்தகை அவர்கள் உடனடியாக  இந்த விபரங்களை முதல்அமைச்சரின் தனிச்செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.  அதற்கு தனிச்செயலாளர் முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்காக  முன்னாடி போகிற காரில் போய்க்கொண்டிருக்கிறார். நான் அவருக்கு பின்னாடி வேறு காரில் போய்க்கொண்டு இருக்கிறேன். காரை விட்டு இறங்கியவுடன் முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார்...

அதற்குள் அக்கா பானுமதி அவர்களின் பிரேதத்தை அடக்கம் செய்வதற்கான எல்லா பணிகளும் ஏறக்குறைய முடிந்து. பெட்டியை சவக்குழியில் இறக்கும் தருவாயில், அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்த அண்ணன் செல்வப்பெருந்தகை அவர்கள் கையில் போனுடன் ஓடி வந்து அண்ணன் திருமா அவர்களிடம் கொடுத்து முதல்வர் பேசுகிறார் என்று கொடுத்துள்ளார்.

அண்ணன் திருமா அவர்களிடம் போனில் பேசிய முதல்வர் எடப்பாடியார் அவர்கள் அக்கா விருப்பப்படி அவரை அவரது   சொந்த ஊரில் அடக்கம் செய்ய எடுத்துச்செல்லுங்கள்.  நான் விதிகளை திருத்தி கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் அண்ணன் திருமா அவர்கள் மிகப்பெரிய ஆறுதல் அடைந்துள்ளார். அதன்பிறகே அக்கா பானுமதியின் பிரேதம் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.


இந்த  விவரங்களை எங்களிடம் கூறிய அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்  "இதுபோன்ற சூழ்நிலைகளில் முதல்வராக எடப்பாடியார் இருந்ததால் மனித நேயத்துடன் நடந்துகொண்டார். அதே இடத்தில்  முதல்வராக ஸ்டாலின் இருந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டார் என்று சொன்னார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை அவரது மரணத்தில் தெரிந்து கொண்டேன்.

தன்னுடைய தகப்பனாரின் உடலை மெரினா கடற்கரையில் வைப்பதற்காக  பல வழக்குகளை வாபஸ் வாங்கி சட்டவிதிகளை திருத்தி அடக்கம் செய்ய அனுமதி வாங்கினார் என்பதை நாடறியும்.  ஆனால் சென்னையிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலை சென்னையில் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய சட்ட விதிகளை காரணம் காட்டி மறுத்துவிட்டார். இத்தனைக்கும் சென்னை மாநகராட்சி மேயர் ஒரு தலித் என்பது கூடுதல் தகவல் என்று பதிவிட்டுள்ளார் தணிகைச் செல்வன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow