விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்கராஸ்... தடுமாறிய முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்!

பாரம்பரியமிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டைட்டிலை, தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஸ்பெயினின் இளம் வீரர் அல்கராஸ் சாதனை படைத்துள்ளார்.

Jul 15, 2024 - 17:29
 0
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்கராஸ்... தடுமாறிய முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்!

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான, விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அல்கராஸ், ஜோகோவிச் இருவரும் மோதினர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம் வீரரான அல்கராஸ், கடந்தாண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்த அல்கராஸ், இந்தாண்டும் நோவாக் ஜோகோவிச் எதிராக இறுதிப்போட்டியில் களமிறங்கினார். அனுபவம் மிக்க வீரரான ஜோகோவிச் எளிதில் அல்கராஸை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.    
  
ஆனால், போட்டி தொடங்கியது முதலே ஆட்டத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்தார் அல்கராஸ். முதல் செட்டின், முதல் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச் இருவரும் மாறி மாறி Deuce, அட்வான்டேஜ் ஸ்டேஜ்க்கு சென்றபடி இருந்தனர். இதனால் போட்டி இறுதி நிமிடம் வரை அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பத்திலேயே ஜோகோவிச்சின் சர்வீஸ் செட்டை பிரேக் செய்து லீடிங் பெற்றார் அல்கராஸ். அதன்பின்னரும் இருவரும் விடாக் கண்ணன் கொடாக் கண்ணனாக விளையாடினாலும் ஆட்டம் அல்கராஸ் பக்கமே இருந்தது. 6-2, 6-2 என முதல் இரண்டு செட்களையும் வென்று அசத்தினார் அல்கராஸ். ஜோகோவிச்சுக்கு கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவே வில்லை; அப்படியொரு பேயாட்டம் அது!.

காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் ஏஸ் சர்வீஸ் வீசுவதிலும், டிராப் பால் ஆடுவதிலும் அல்கராஸ் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ஃபைனலில் இந்த இரண்டையும் அதி நுட்பமாக பயன்படுத்தி ஜோகோவிச்சை பாடாய் படுத்தினார். ட்ராப் பால் ஆடுவதில் ரோஜர் அளவிற்கு ஸ்டைலிஷாக இல்லையென்றாலும், ஜோகோவிச்சை அங்குமிங்கும் ஓடவிட்டு வேடிக்கைப் பார்த்தார் அல்கராஸ். ஜோகோவிச்சின் வலிமையான ஷாட்களை, அவருக்கே அல்கராஸ் திருப்பி அனுப்பிய விதம் பேரற்புதமாக இருந்தன. 90 விழுக்காடு சொல்லி வைத்தாற்போல துல்லியமாகவும் நேர்த்தியாகவும் ஜோகோவிச்சின் சாம்பியன் கனவை தகர்த்தன. அல்கராஸின் பேக் ஹேண்ட் ஷாட்கள் அனைத்தும் ரபேல் நடாலை கண் முன் நிறுத்தின.

அதேபோல் அல்கராஸ் மிக தைரியமாக நெட் பால் ஆடிய விதமும், அவரது வெற்றியை கொஞ்சம் எளிதாக்கியது எனலாம். மூன்றாவது செட்டில் சாம்பியன்ஷிப் பாயிண்ட் சர்வீஸ்களை அடுத்தடுத்து பதற்றத்தில் வீணடித்தது மட்டுமே அல்கராஸ் செய்த பெரும் பிழை. டை பிரேக்கர் வரை செல்லாமல் ஈஸியாக முடிந்திருக்க வேண்டிய ஆட்டம். அதற்கான பலனை அனுபவித்ததோடு, அந்த கற்பிதங்களில் இருந்து டை பிரேக்கரையும் வென்று சாம்பியன் ஆனார் அல்கராஸ். அதன்படி இந்த ஆட்டம் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் முடிவுக்கு வந்தது. டை பிரேக்கரை ஜோகோவிச் வென்றிருந்தால், இறுதி முடிவு வேறு மாதிரியாக மாறியிருக்கும். அப்படி நடந்திருந்தால் தன் வாழ்நாளுக்கும் இந்தப் போட்டியை அல்கராஸ் மறந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். 

முழங்காலில் சர்ஜரி செய்த வலியோடு விளையாடியதை ஜோகோவிச்சின் கண்களில் பார்க்க முடிந்தது. இப்படியொரு துயரத்தோடு ஃபைனல் வரை ஜோகோவிச் வந்ததே பெரிய சாதனை தான். தொடர்ச்சியாக 34 வெற்றிகளை குவித்த ஜோகோவிச்சின் வெற்றி வேட்டைக்கு அல்கராஸ் தடை போட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அல்கராஸ் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதில் இரண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்ட்லாம் வென்று சாதனை படைத்துள்ள அல்கராஸ், இறுதிப்போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானிடம் வெற்றி பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார். அதேபோல், "இது போன்ற சிறந்த வீரருக்கு எதிராக நான் இதுவரை விளையாடியதில்லை" என அல்கராஸ்க்கு புகழாரம் சூட்டினார் ஜோகோவிச்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow