முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐ முக்கிய உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Jul 8, 2024 - 15:05
Jul 8, 2024 - 15:23
 0
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐ முக்கிய உத்தரவு
குட்கா முறைகேடு வழக்கு

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு குட்கா கிடங்கில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அமைச்சா்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கிடங்கில் வைத்து விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்டோரின் பெயா்களும் அடிபட்டன. இந்த வழக்கு தொடா்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2021-ஆம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும், முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு 2022இல் அனுமதி வழங்கியது.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் முதன்மை நீதிமன்றத்துக்கு, சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை சென்னை எம்.பி.., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ,  இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் எதிராக கூடுதல் குற்றபத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பின்னர் வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி விசாரணை ஆகஸ்ட் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow