PAK vs BAN Test Match : டெஸ்ட்டில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்.. பாக். மண்ணில் வரலாற்று சாதனை!

PAK vs BAN Test Match : டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். இந்த வரலாற்று வெற்றியை வங்கதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடந்த வன்முறை வங்கதேச மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. தற்போது அந்த நாடு பெற்ற சாதனை வெற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

Aug 25, 2024 - 16:42
Aug 25, 2024 - 17:04
 0
PAK vs BAN Test Match : டெஸ்ட்டில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்.. பாக். மண்ணில் வரலாற்று சாதனை!
Bangladesh Beat Pakistan

PAK vs BAN Test Match : பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

அந்த அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பரிதவித்த நிலையில், சைம் அயூப்பும், சவுத் ஷகீலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய  சைம் அயூப் 56 ரன்னில் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய முகமது ரிஸ்வான், சவுத் ஷகீலுடன் இணைந்து பட்டையை கிளப்பினார். நிதானமாக விளையாடிய சவுத் ஷகீல் சூப்பர் சதம் (141 ரன்கள்) எடுத்து அவுட் ஆனார்.

முகமது ரிஸ்வான் அதிரடி சதம் (171 ரன்கள்) எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 448 ரன்களுக்கு பாகிஸ்தான் டிக்ளேர் செய்த நிலையில், வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ (16 ரன்), ஜாகிர் ஹசன் (12 ரன்) விரைவில் அவுட்டாக 53/2 என பரிதவித்தது 

வங்கதேசம். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஷத்மான் இஸ்லாம் அதிரடி அரைசதம் (93 ரன்) எடுத்து அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நங்கூரம் போல் நின்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். தன்னுடைய கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்ட  முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களில் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவற விட்டார். பின்பு லிட்டன் தாஸ் (56 ரன்), மெஹிதி ஹசன் மிராஸ் (77 ரன்) அடுத்தடுத்து அரை சதம் விளாசி அவுட் ஆனார்கள். 

167 ஓவர்கள் விளையாடிய வங்கதேச அணி 565 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழந்து 23 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், இன்று 5வது மற்றும் கடைசி நாளில் பேட்டிங்கை தொடர்ந்த பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அந்த அணியின் அப்துல்லா ஷபீக் (37 ரன்), சைம் அயூப் (1 ரன்), கேப்டன் ஷான் மசூத் (14 ரன்), ஸ்டார் வீரர் பாபர் அசாம் (22 ரன்) என வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய சவுத் ஷகீல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஒருபக்கம் பாகிஸ்தான் வீரர்கள் களத்துக்கு வருவதும், அடுத்த நிமிடமே அவுட் ஆகி போவதுமாக இருக்க, மறுபக்கம் முகமது ரிஸ்வான் ஓரளவு போராடினார்.

முதல் இன்னிங்சில் அதிரடி சதம் (171 ரன்கள்) விளாசிய முகமது ரிஸ்வான் 2வது இன்னிங்சிலும் அரைசதம் (51 ரன்) எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதும் பாகிஸ்தானும் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. 55 ஓவர்கள் தாக்குபிடித்த பாகிஸ்தான் அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் வங்கதேசம் வெற்றி பெற 30 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த இலக்கை 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்த வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்கள். முதல் இன்னிங்சில் 191 ரன்கள் விளாசிய முஷ்பிகுர் ரஹீம் ஆட்டநாயகன் விருது வென்றார்.

டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்த  வங்கதேசம் 12 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்த வரலாற்று வெற்றியை வங்கதேச ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் ஏற்பட்ட வன்முறை வங்கதேச மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. தற்போது அந்த நாடு பெற்ற சாதனை வெற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow