பாகிஸ்தான் மண்ணில் மாஸ் காட்டிய வங்கதேசம்.. 565 ரன்கள் குவித்து அசத்தல்.. தடுமாறும் பாக்.!
மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நங்கூரம் போல் நின்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். தன்னுடைய கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்ட முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களில் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவற விட்டார். இதில் 22 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அந்த அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பரிதவித்த நிலையில், சைம் அயூப்பும், சவுத் ஷகீலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய சைம் அயூப் 56 ரன்னில் அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய முகமது ரிஸ்வான், சவுத் ஷகீலுடன் இணைந்து பட்டையை கிளப்பினார். நிதானமாக விளையாடிய சவுத் ஷகீல் சூப்பர் சதம் (141 ரன்கள்) எடுத்து அவுட் ஆனார்.
மறுபக்கம் தனக்கே உரிய டிரேட் மார்க் ஷாட்களை அடித்த முகமது ரிஸ்வான் அதிரடி சதம் (171 ரன்கள்) எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். 3 சிக்ஸர்களை விளாசிய முகமது ரிஸ்வான் 11 பவுண்டரிகளையும் ஓட விட்டார். 448 ரன்களுக்கு பாகிஸ்தான் டிக்ளேர் செய்த நிலையில், வங்கதேசம் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (16 ரன்), ஜாகிர் ஹசன் (12 ரன்) விரைவில் அவுட்டாக 53/2 என பரிதவித்தது வங்கதேசம். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஷத்மான் இஸ்லாம் அதிரடி அரைசதம் (93 ரன்) எடுத்து அவுட் ஆனார். பின்பு களமிறங்கிய மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நங்கூரம் போல் நின்று அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
தன்னுடைய கிளாசிக் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்ட முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்களில் அவுட் ஆகி இரட்டை சதத்தை தவற விட்டார். இதில் 22 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். பின்பு லிட்டன் தாஸ் (56 ரன்), மெஹிதி ஹசன் மிராஸ் (77 ரன்) அடுத்தடுத்து அரை சதம் விளாசி அவுட் ஆனார்கள். 167 ஓவர்கள் விளையாடிய வங்கதேச அணி 565 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் பாக்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால் வங்கதேசம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
What's Your Reaction?