Pakistan Gold Medalist Arshad Nadeem Buffalo Gift : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 5 வெண்கலகம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்களை கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இதேபோல் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதுவும் அர்ஷத் நதீம் 91 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்து ஓலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். தங்கம் வென்று தனது தாய் நாட்டுக்கு பெருமை சேர்ந்த 27 வயதான அர்ஷத் நதீமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அர்ஷத் நதீமின் வெற்றியை பாகிஸ்தான் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பாகிஸ்தான் அரசும், பல்வேறு தரப்பினரும் பல கோடி மதிப்பில் பரிசு மழை பொழிந்து வருகின்றனர்.
இதேபோல் அர்ஷத் நதீமினுக்கு அவரது மாமனார் கொடுத்த ஒரு பரிசு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அர்ஷத் நதீமின் தங்கம் வென்றுள்ளதால், அவரது மாமனார் முகமது நவாஸ், எருமை மாடு ஓன்றை பரிசாக வழங்கியுள்ளார். 'என்ன! ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மருமகனுக்கு எருமை மாடு பரிசா? தங்கப்பதக்கத்தின் மதிப்பு ஒரு எருமை மாடா'' என்று நெட்டிசன்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இது குறித்து பெருமையுடன் பேசிய முகமது நவாஸ், ''எங்களது சமுதாயத்தில் எருமை மாட்டை பரிசாக வழங்குவது என்பது மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய செயலாகும். எருமை மாடு பரிசாக வழங்கியது எங்கள் சமூகத்தின் ஆழமான வேரூன்றிய மரபுகள் மற்றும் மருமகன் அர்ஷத் நதீனுக்கு எங்கள் கிராமப்புற பின்னணியுடன் வலுவான தொடர்பை அங்கீகரிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மருமகன் குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய அவர், ''6 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மகள் ஆயிஷாவை நாங்கள் அர்ஷத் நதீமினுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தபோது, அவர் சிறு வேலை ஒன்றையும், கிடைக்கும் வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் அவர் தனது விளையாட்டுத் திறன் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து வீட்டின் அருகேயும், மைதானங்களிலும் ஈட்டி ஏறிதல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது உழைப்பின் பலனாக தங்கத்தை அறுவடை செய்துள்ளார்'' என்றார்.
அர்ஷத் நதீமின்-ஆயிஷா தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். அர்ஷத் நதீன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டம் கானேவால் பகுதியில் தனது பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.