விளையாட்டு

Shakib Al Hasan : கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது, ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Shakib Al Hasan : கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?
Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case

Bangladesh Cricketer Shakib Al Hasan Murder Case : வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். பின்பு வன்முறை நாடு முழுவதும் வெடித்த நிலையில், வங்கதேசத்தில் அரசு அலுவலகங்கள், பொது கட்டடங்கள் ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீ  வைத்தனர். இந்து கோயில்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

தொடர் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி  வந்து விட்டார். ஷேக் ஹசீனா ராஜினாமா பிறகு வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படுவதாக ராணுவ தளபதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அமைப்பு விருப்பத்தின் பேரில் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், வங்கதேச வன்முறையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அடபோர் பகுதியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆடைத் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த முகமது ரபேல் என்பவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் மாணவர் அமைப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முகமது ரபேல் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகன் கொல்லப்பட்டது குறித்து முகமது ரபேலின் தந்தை ரபீகுல் இஸ்லாம்  அடபோர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதாவது தனது மகனின் கொலைக்கு ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட  ஆளும் அவாமி லீக் கட்சியின் 154 பிரமுகர்கள் காரணம் என்று  ரபீகுல் இஸ்லாம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஷகிப் அல் ஹசன் உள்பட 154 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மகுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தவர். வங்கதேசத்தில் வன்முறை நடந்தபோது ஷகிப் அல் ஹசன், கனடாவில் நடந்த 'குளோபல் டி20 கனடா லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.