Paris Olympics 2024: இந்தியா - மூன்றாவது நாள் ரவுண்ட் அப்!
Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இந்தியா பங்கேற்ற போட்டிகள் மற்றும் வென்ற பதக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
Paris Olympics 2024 : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. விளையாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் இந்தியா சார்பாக 117 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.
இதைத்தொடர்ந்து பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக பி.வி.சிந்துவும், மாலத்தீவு சார்பாக ஃபாத்திமத் நபாஹாவும் நேருக்கு நேர் மோதினர். இப்போட்டி மொத்தம் 29 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பி.வி.சிந்து, ஃபாத்திமத்தை 21 - 9, 21 - 6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மேலும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அர்ஜுன் பபுஜா 630.1 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் போட்டியின் இறுதியில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தார். இதனால் பதக்கத்தை நழுவவிட்ட அர்ஜுன் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராஜ் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இன்றைய ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினா அணிக்கு எதிராகக் களமிறங்கிய இந்திய அணி 1 - 1 என்ற கணக்கில் புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
மேலும் படிக்க: மின்சார வாகனம் வாங்க அரசு மானியம்
ஒலிம்பிக் போட்டியில் இம்முறை இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்க்குள்ளாகியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை இந்தியா ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 9 பதக்கங்களுடன் சீன முதலிடத்திலும், 8 பதக்கங்களுடன் கொரியா 2ம் இடத்திலும், 7 பதக்கங்களுடன் ஜப்பான் 3ம் இடத்திலும் உள்ளன.
What's Your Reaction?