Anna University Examination Fees Hike : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அண்ணா பல்கலைக்கழக 'செமஸ்டர்' தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

Anna University Examination Fees Hike : ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Aug 25, 2024 - 21:13
Aug 25, 2024 - 22:23
 0
Anna University Examination Fees Hike : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அண்ணா பல்கலைக்கழக 'செமஸ்டர்' தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
Anna University Semester Exam Fees

Anna University Examination Fees Hike : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் செமஸ்டர் தேர்வு முதல் அமலுக்கு வர உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது. 

அதாவது இளநிலை முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000ல் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதலுக்கான கட்டணம் 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதேபோல் மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை டிஜி லாக்கரில் பதிவு செய்வதற்கான கட்டணம் 1500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மேலும் தன்னாட்சி பெறாத பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு செய்முறை தேர்வு கட்டணம் செயல்முறை பயிற்சி தாள் ஒன்றுக்கு 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக கட்டணம் 
உயர்த்தப்பட்டுள்ளது. 

இளநிலை மாணவர்களுக்கான ஆய்வு அறிக்கை கட்டணம் 300 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இளநிலை செய்முறை பயிற்சி கட்டணம் 450 முதல் 675 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு அரசு மாணவர்கள் கல்வி பயில பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வந்தனர். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு  நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளுடைய தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக சிண்டிகேட் அவையில் முடிவு எடுக்கப்பட்டது. 

இது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு கட்டண உயர்வு தற்போது நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும், வருகிற ஆண்டுகளிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது. தற்போதுள்ள தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும். 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் அதிகம் படிப்பதால் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கூறி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் செயலாளர்களுடன் ஆலோசித்து சிண்டிகேட்டில் முடிவு எடுத்து இருந்தாலும் இனி கட்டணம் உயர்த்தப்படாது. 

தன்னாட்சி மற்றும் தன்னாட்சி இல்லாத கல்லூரிகளிலும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் எவ்வளவு வசூலிக்கப்படுகிறதோ அதையே வசூலிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்படும்'' என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow