Krishna Jayanti 2024 Festival At ISKCON : துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர்.பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நாளில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
பகவான் மகாவிஷ்ணு 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அஷ்டமி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 9:13 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 7:30 வரை உள்ளது. அதே சமயம் ரோகிணி நட்சத்திரமானது, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு மாலையில் தொடங்கி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை வரைக்கும் ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. அஷ்டமி திதியும் இணைந்து வரும் நேரம் இரவு நேரம் என்பதால், அது கிருஷ்ணன் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி நள்ளிரவில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்த கமல்ஹாசன்.. என்ன விஷயம்?
இந்நிலையில் சென்னை ஈசிஆர் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. நாளை அதிகாலை 4:30 மணிக்கு பூஜையுடன் தொடங்கும் இவ்விழாவில் குருபூஜை, ஸ்ரீமத் பாகவதம் வகுப்புகள், மகா அபிஷேகம், கீர்த்தனைகள் என நள்ளிரவு 12.30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. நாளை மறுநாள் காலை முதல் பிற்பகல் வரை அபிஷேகம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதையொட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவையான பிரசாதங்கள் வழங்கப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.