Kamal Haasan Visit CM Stalin in Chennai : கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு தமிழ்நாடு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அதை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு பணிகள் காரணமாக கமல்ஹாசன் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், கமல்ஹாசன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வழங்கினார். இந்த சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ''இன்று (25ம் தேதி) காலை 11.30 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள, கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்தபோது, பல்வேறு பணிகளால் கலந்துகொள்ள முடியாமல் போனதால், அவர் இன்று முதல்வரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை, முதல்வரிடமிருந்து கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். மேலும், முதல்வர் ஸ்டாலின் விரைவில் செல்லவிருக்கும் அமெரிக்க பயணத்திற்கு, கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வந்தாலும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கமல்ஹாசனும் அரசியலில் இருக்கிறார் என்பது தேர்தல் நேரத்தில்தான் அனைவருக்கும் தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம்தான் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன், சினிமாவில் முழு கவனம் செலுத்துவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.