விளையாட்டு

இந்தியாவின் ஆல் டைம் பிளேயிங் லெவன்.. தோனி, கங்குலியை கழட்டிவிட்ட தினேஷ் கார்த்திக்!

''இந்திய அணிக்கு பல ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். அவரது தனித்துவமான தலைமைப் பண்பை உலகமே பாராட்டி வருகிறது. ஆனால் தோனி மீதுள்ள தனிப்பட்ட வன்மம் காரணமாக, அவரை தினேஷ் கார்த்திக் தனது ஆல்டைம் லெவனில் சேர்க்கவில்லை'' என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் ஆல் டைம் பிளேயிங் லெவன்.. தோனி, கங்குலியை கழட்டிவிட்ட தினேஷ் கார்த்திக்!
Dhoni And Dinesh Karthik

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழ்நாட்டை சேர்ந்த  இவர் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1025 ரன்களும், 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1752 ரன்களும், 60 டி20 போட்டிகளில் விளையாடி 686 ரன்களும் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிரடியில் கலக்கியுள்ளார்.

அண்மையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக், நேற்று சுதந்திர தினத்தையொட்டி டெஸ்ட், 50 ஓவர் போட்டி மற்றும் டி20 போட்டி 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜொலித்த இந்தியாவின் 'ஆல் டைம்' பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் அறிவித்த  'ஆல் டைம்' லெவன் அணி:- வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் 12வது வீரர் ஹர்பஜன் சிங்.

இந்த லெவனில் சச்சின், சேவாக், டிராவிட்,  அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், விராட் கோலி என சாம்பியன் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக இருந்து டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த 'கூல் கேப்டன்' மகேந்திர சிங் தோனி   'ஆல் டைம்' லெவனில் இடம்பெறவில்லை.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே மாற்றி அமைத்து, கேப்டனாக இருந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த 'கிரிக்கெட்டின் தாதா' சவுரவ் கங்குலியும், இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி, கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய கவுதம் கம்பீரும் தினேஷ் கார்த்திக்கின் 'ஆல் டைம்' பிளேயிங் லெவன் அணியில் இடம்பெறவில்லை.

இதனால் தோனி, கங்குலி மற்றும் கம்பீர் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தினேஷ் கார்த்திக்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தோனி ரசிகர்கள், ''இந்திய அணிக்கு பல ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான். அவரது தனித்துவமான தலைமைப் பண்பை உலகமே பாராட்டி வருகிறது.

ஆனால் தோனி மீதுள்ள தனிப்பட்ட வன்மம் காரணமாக, தினேஷ் கார்த்திக் தனது ஆல்டைம் லெவனில் தோனியை சேர்க்கவில்லை. தோனி இல்லாமல் இந்திய கிரிக்கெட்டையே நினைத்து பார்க்க முடியாது. அவர் ஒரு லெஜண்ட்'' என்று  தினேஷ் கார்த்திக்கை விளாசி வருகின்றனர். இதேபோல், ''தனது ஆக்ரோஷமான பாணியின் மூலம் இந்திய அணியை வெற்றி பெற வைத்ததுடன், பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர் கங்குலி. அவரை தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்காதது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது'' என்று நெட்டின்சன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.