விருப்ப ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் பேசியுள்ள காவலர், "யாரையாவது அடித்தால் போலீஸ் வருவாங்க. போலீசை அடித்தால் யாரும் வருவதில்லை. போலீசை காப்பாற்ற யாருமில்லை. காவல்துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றி விட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். 2016 ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆயுதப்படையில் இருந்து கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றலாகி சென்றேன்.
ஆனால் இதனை குற்றமாக கருதி என்னுடைய சீனியாரிட்டி குறைத்து என் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விட்டனர் சில அதிகாரிகள். கடந்த 8 ஆண்டுகளாக என்னுடைய கோரிக்கை மனுவை பல காவல் அதிகாரிகள் கொடுத்தேன். ஆனால் எந்த பலனுமில்லை. முதல்வர் தனிப்பிரிவிலும் கொடுத்தேன். எந்த பயனுமில்லை.
மேலும் படிக்க: இதயங்களை கொள்ளையடித்த எதிர்வீட்டு ‘ஷோபனா'.. நித்யா மேனனுக்கு தேசிய விருது..
காவல்துறையை பொறுத்தவரையில் வேலை சேர்ந்த நாள் எது என்பது தான் சீனியாரிட்டிக்கு அடித்தளமே. காவல்துறையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதிமுறைகளை வைத்து கொண்டு, காவலர்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டிருப்பது வேதனை. அதிகாரிகள் இதனை சரிசெய்யக்கூட நேரமில்லை. அலுவலக ஊழியர்கள் சொல்வதை கேட்டு கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றாலும் எதுவும் நடப்பதில்லை.
2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் காவலர் பணியில் சேர்ந்த நாள் தான் சீனியாரிட்டிக்கு அடிப்படை என்ற தீர்ப்பு வந்தது. ஆனால் அதற்கு மேல்முறையீடு செய்து அது நிலுவையில் இருக்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது. ஏன் என்று கேட்க ஆளில்லை. பதவி உயர்வு குறித்து யாராவது கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். சரியான விதிமுறைகளின் படி பதவி உயர்வு வழங்கப்பட்டால், காவலர்கள் அடுத்தடுத்த நிலைக்கு சென்று முறையாக பணி செய்வார்கள்.
இதையும் பார்க்க: ரவுடியை சுட்டுப்பிடித்த உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்.. போதை பெண்ணால் பரபரப்பு..
மறைந்த முதல்வர் கருணாநிதி தான், காவல்துறையில் 10 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் பணி செய்தால் பதவி உயர்வும், அடுத்த 5 ஆண்டுகள் தண்டனை இல்லாமல் பணி செய்தால் அடுத்த பதவி உயர்வும், அதற்கு அடுத்த 10 ஆண்டுகள் எந்த வித தண்டனை இல்லாமல் பணி செய்தால் அடுத்த பதவி உயர்வும் என அழகான திட்டங்களை கொண்டு வந்தார். காவலர்கள் அடுத்தடுத்த நிலைமைக்கு செல்ல வேண்டும் என மறைந்த முதல்வர் கருணாநிதி திட்டங்களை கொண்டு வந்தார்.
ஆனால் தற்போது காவல்துறையில் அந்த திட்டங்கள் எதுவுமில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு நல்ல வழியை ஏற்படுத்தி தரவேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. காவலர்களுக்காக நியாயம் கேட்க யாருமில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். காவலர்களுக்கு காவல் சார்நிலை பணி விதிமுறைகள் என்ற அடிப்படையில் தான் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்று காவலர் வேதனையோடு பேசி உள்ளார்.