ரவுடியை சுட்டுப்பிடித்த உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்.. போதை பெண்ணால் பரபரப்பு..
பிரபல ரவுடி ரோஹித் ராஜை கடந்த 13ஆம் தேதி சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியில் உள்ள கிருஷ்ண பவன் ஹோட்டல் அருகே நேற்றிரவு இளம்பெண் ஒருவர் அளவுக்கதிகமான போதையில் தனது 7 வயது குழந்தையை மிகக் கடுமையாக சாலையில் வைத்து தாக்கியுள்ளார். குழந்தை கதறி அழுததை அடுத்து, சுற்றி இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணிடம் எதற்காக குழந்தையை அடிக்கிறீர்கள்? என கேட்டபோது எனது குழந்தையை நான் அடிக்கிறேன் எனக் கூறி தடுக்க வந்த நபர்களையும் அநாகரிகமான முறையில் பேசியுள்ளார்.
மேலும், தனது உடைகளை கிழித்துக்கொண்டு சாலையில் அரை நிர்வாணமாக தடுக்க வந்த நபர்களிடம் சண்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் டி.பி சத்திரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட நான்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு இளம்பெண் மதுபோதையில் அரை நிர்வாண கோலத்தில் பொதுமக்களிடம் சண்டையிட்டதை கண்ட பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, சாலையில் சென்ற இரண்டு பெண்களிடம் துப்பட்டாவை வாங்கி மது போதையில் இருந்த பெண்ணுக்கு போர்த்த முற்பட்டுள்ளார்.
அதற்கு போதையில் இருந்த இளம்பெண் துப்பட்டாவை தன்மீது உடுத்த சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை அநாகரிகமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்ற காவலர்கள், அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் தடுக்க முற்பட்டபோதும் துப்பட்டா போட வந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைசெல்வியை தாக்கியுள்ளார்.
மேலும் தடுக்கச் சென்ற காவலர்களையும் கீழே கிடந்த கட்டையால் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மது போதையில் இருந்த இளம்பெண் தாக்குதலில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
பின்னர் சாலையில் சென்ற நபர்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்ட அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் விசாரிக்க முடியவில்லை. மேலும், காவல் நிலையத்திலேயே காவலர்களிடம் அநாகரிகமாக பேசி தாக்க முயன்றார்.
இந்நிலையில் அவரது 7 வயது குழந்தையை டிபி சத்திரம் போலீசார் இரவு முழுவதும் வைத்துக்கொண்டு இளம்பெண்ணின் உறவினருக்கு தகவல் அளித்து காவல் நிலையம் வரச் செய்தனர். விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த சீத்தா (23) என்பது தெரியவந்தது. தனது கணவர் மனோஜ் மற்றும் குடும்பத்துடன் ஷெனாய் நகர் பகுதியில் வசித்து வருகிறார் என தெரியவந்தது.
நேற்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறை காரணமாக, சென்னை அண்ணா சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வரும் அவரது தந்தையை பார்ப்பதற்காக சீதா சென்றுள்ளார். அங்கு தந்தையின் அறையில் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை குடித்த அந்த பெண், தனது வீட்டிற்கு செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறங்கி அருகில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டிற்கு செல்வதற்காக முற்பட்டு உள்ளார்.
அவரின் 7 வயது குழந்தை வீட்டுக்கு செல்லவேண்டும் என கூறியதால், கோபத்தில் குழந்தையை அடித்ததும் தடுக்க வந்த பொதுமக்களை அநாகரிகமாக பேசி அடித்தது மட்டுமல்லாமல் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களையும் தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சீத்தாவை கைது செய்த டி.பி சத்திரம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளரை மதுபோதையில் தாக்கிய சீத்தாவை, குழந்தையின் நலன் கருதி எச்சரித்து எழுதி வாங்கி காவல் நிலைய ஜாமீனில் அனுப்பினர்.
தாக்குதலுக்குள்ளான பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, கடந்த 13ஆம் தேதி ரவுடி ரோஹித் ராஜை சுட்டு பிடித்ததும், சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






