ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான மலர்க்கொடி.. அதிமுகவில் இருந்து கட்டம் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி

Malarkodi in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள மலர்க்கொடி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Jul 18, 2024 - 11:28
Jul 19, 2024 - 10:07
 0
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான மலர்க்கொடி.. அதிமுகவில் இருந்து கட்டம் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி
Malarkodi Sekar in Armstrong Murder Case

Malarkodi in Armstrong Murder Case : திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணை செயலாளராக இருந்த மலர்க்கொடி சேகரை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் மலர்க்கொடி சேகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதற்கட்டமாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வந்தனர். அப்போது, கைது செய்யப்பட்ட ரவுடி திருவெங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பித்து ஓட முயற்சித்தால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேர் கைதாகி உள்ளனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என்பவர் கைது செய்ப்பட்டார். அடுத்து, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி, மற்றொரு அரசியல் பிரமுகரான வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவர் கைதான வழக்கறிஞர் அருள் எனக் கூறப்படுகிறது. அவரது மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி மலர்க்கொடி என்பவருடன், அருள் அடிக்கடி பேசி வந்ததும், இருவருக்கும் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, மலர்க்கொடி மற்றும் அவரின் உதவியாளர் ஹரிஹரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருவருக்கும் தொடர்பு இருப்பதும், கூலிப்படையினருக்கு, மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் வரை பணம் கைமாறியதும் தெரியவந்தது. இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். 

சென்னை திருவல்லிக்கேணி பார்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் சேகர். தோட்டம் சேகர் என அழைக்கப்படும் அவர், சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்தார். அதிமுகவின் பிரசார பாடகராகவும் இருந்த அவர் கடந்த 2001ஆம் ஆண்டு மயிலாப்பூர் சிவகுமாரால் கொல்லப்பட்டார். தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி தான் மலர்க்கொடி, வழக்கறிஞரான இவர்  திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளராக உள்ளார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ள தொடர்பில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலர்க்கொடி சேகர் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணை செயலாளராக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மலர்க்கொடியை நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் மலர்க்கொடி சேகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow