அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு என உறுதி!

''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Aug 27, 2024 - 21:13
 0
அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு என உறுதி!
MK Stalin Left For USA

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். 

முன்னதாக, காரில் சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கடந்த 21ம் தேதி அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் சிங்கப்பூரை சேர்ந்த ஐபி நிறுவன திட்டத்தையும்,  ஜப்பான் நிறுவனத்தின் திட்டத்தையும் நான் தொடங்கி வைத்தேன்.

இந்த இரண்டு நிறுவனங்களின் திட்டங்கள் மூலமாக 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ரூ.3,540 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றும் ரூ.3,796 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுடன் கட்டுமான பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன. கடந்த 21ம் தேதி நடந்த தமிழ்நாடு முதலீட்டார் மாநாட்டில் ஜப்பானின் மிச்சுவா மற்றும் திட்டங்கள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு அந்த பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன. ரூ.438 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படக்கூடிய நிலையில் உள்ளது. 

இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டன. இதன்மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

இதேபோல் மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் கடந்த காலங்களில் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதேபோல் தற்போதைய பயணம் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து அது அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நமது இலக்கை விரைவில் எட்டுவோம்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow