தமிழகத்தில் ஆம் ஆத்மி கூண்டோடு காலி.!! மொத்தமாக பாஜகவிற்கு தட்டித்தூக்கிய அண்ணாமலை

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக களம் இறங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கி விட்ட அண்ணாமலை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநில செயலாளர்,மாவட்ட தலைவர்களை பாஜகவிற்கு இழுத்து அதிரடி காட்டியுள்ளார்.வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Jul 11, 2024 - 14:38
Jul 11, 2024 - 15:49
 0
தமிழகத்தில் ஆம் ஆத்மி கூண்டோடு காலி.!! மொத்தமாக பாஜகவிற்கு தட்டித்தூக்கிய அண்ணாமலை
AAP Joins BJP

தமிழக பாஜகவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைவர்களாக இருந்தவர்கள் அமைதியாக அரசியல் செய்து வந்தனர். கூட்டணிக்காக திராவிட கட்சிகளை நம்பியிருந்தனர். தனித்து போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றனர் பாஜக வேட்பாளர்கள். இந்த நிலையில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிரடி அரசியலுக்காக ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை களம் இறக்கியது. அண்ணாமலையும் திராவிட கட்சிகளுக்கு போட்டியே நாங்கள் தான், தமிழகத்தில் எதிர்கட்சி பாஜக தான் என்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார்.

இதில் அதிர்ச்சியடைந்த அதிமுக பாஜக உடன் இனியும் கூட்டணியில் இருந்தால் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகிவிடும் என நினைத்து கூட்டணியில் இருந்த  திடீரென விலகியது. இரண்டு கட்சிகளும் தனித்து தேர்தலை எதிர்கொண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது என்றாலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது டெல்லி பாஜக தலைமையை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக  தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை வளர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்கலாம் என அண்ணாமலைக்கு சர்வ சுதந்திரத்தை வழங்கியுள்ளது. 

இந்தநிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை பாஜகவிற்கு இழுத்த அண்ணாமலை தற்போது,தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் முதல் மாவட்ட தலைவர்கள் வரை தங்கள் அணியின் பக்கம் இழுத்துள்ளார்.இதற்கான இணைப்பு நிகழ்வு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

அண்ணாமலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் ஓபிசி மோர்ச்சா மாநில தலைவர் தமிழ்நெஞ்சம், சரவணன், மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், ருக்குமாங்தன், செந்தில் பிரபா உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் அண்ணாமலை வரவேற்றார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் திரு T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் ஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow