கல்லு உடைக்கிறேன் ஜெயிலில.. செல்வபெருந்தகையை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பாஜக

''கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பாஜக பட்டியலிடப்பட்டுள்ளது.

Jul 11, 2024 - 19:32
Jul 11, 2024 - 19:39
 0
கல்லு உடைக்கிறேன் ஜெயிலில.. செல்வபெருந்தகையை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பாஜக
செல்வபெருந்தகை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ''ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் ஆருத்ரா நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜகவினருக்கும் தொடர்பு இருக்கிறது. பாஜகவில் தொடர்ந்து ரவுடிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். '' என்றார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ''பாஜகவில் ரவுடிகள் சேர்க்கப்படுவதாக செல்வபெருந்தகை சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்தான் செல்வபெருந்தகை'' என்று பரபரப்பை பற்ற வைத்தார். இதற்கு பதிலடி கொடுத்த செல்வபெருந்தகை, 'பாஜகவில் இத்தனை ரவுடிகள் உள்ளனர்' என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். 

உடனே வெகுண்டெழுந்த அண்ணாமலை, செல்வபெருந்தகை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான ஆதாரம் என கூறி ஒரு தகவலை பகிர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட செல்வபெருந்தகை, ''என் வழக்கு வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. என் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதே பாஜகதான். மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என்றார். 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''முதன்முதலில் இந்த பிரச்சனையை தூண்டியது செல்வபெருந்தகைதான். இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். நான் சண்டை போட்டால்தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால்,அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். என்ன வந்தாலும் சந்திக்க தயார்'' என்று பரபரப்பாக பேசினார்.

இப்படி அண்ணாமலை-செல்வபெருந்தகை இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக, 'எக்ஸ்' தளத்தில் செல்வபெருந்தகையை கிண்டல் செய்யும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

சுமார் 1.22 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் கல்லு உடைக்கிறேன் ஜெயிலில என்று பாடலுடன் தொடங்கி தமிழ்நாடு பாஜக, செல்வபெருந்தகையை கடுமையாக தாக்கியுள்ளது. 'கட்சியில் யாரோ ஒருவர் ரவுடி இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தலைவரே ரவுடியாக இருப்பது இங்குதான்'' என்று தொடங்கும் வீடியோவில்  செல்வபெருந்தகை மீதான வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதாவது ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் முக்கிய குற்றவாளி செல்வபெருந்தகை என வீடியோவில் கூறப்படுகிறது. மேலும் அவர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், கலவரம் செய்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர புரட்சி பாரதம், விசிக, பகுஜன் சமாஜ் என பல கட்சிகளுக்கு தாவிய செல்வபெருந்தகை, லண்டனில் ரூ.500 கோடியில் கல்லூரி ஒன்றை அமைத்து மனைவியை இயக்குனராக நியமித்துள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. கக்கன், காமராஜர் என பெரிய தலைவர்கள் இருந்த காங்கிரசில் இப்படியும் ஒரு தலைவர் இருக்கிறார் என்று அந்த வீடியோ முடிவடைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow