நடிகை கௌதமியின் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த அழகப்பன்.. விடாது விரட்டும் வழக்குகள்

Actress Gautami Property Fraud Case : நடிகை கௌதமி மற்றும் அவரது சகோதரியின் சொத்துக்களை அபகரித்த விவகாரம் தொடர்பாக அழகப்பன் என்பவரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Jul 16, 2024 - 12:17
Jul 16, 2024 - 13:58
 0
நடிகை கௌதமியின் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த அழகப்பன்.. விடாது விரட்டும் வழக்குகள்
actress gautami property fraud case

Actress Gautami Property Fraud Case : சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர்,திருவண்ணாமலை காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் தனது சொத்துக்களை அழகப்பன் என்பவர் அபகரித்து விட்டதாக  தனித் தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அழகப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


நடிகை கௌதமி  சிறுவயதிலிருந்து சினிமா துறையில் சம்பாதித்த சொத்துக்களை நிர்வகிப்பதற்காகவும் ,விற்பனை செய்வதற்காகவும் அழகப்பன் என்பவரை நம்பி பொது அதிகாரம் வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார். அதனைத் தவறாக பயன்படுத்தி தனது 25 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாக சேர்ந்து அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 


அந்த புகாரில், நான் சென்னை அக்கரை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து  வருகிறேன். நான் ஆந்திராவில் பிறந்து கடந்த 35 ஆண்டுகளாக சென்னையில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தமிழ் நன்றாக எழுத படிக்க தெரியும். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் அமெரிக்காவில் திரைப்படம் சம்பந்தப்பட்ட பட்டப்படிபை படித்து வருகிறார். நான் திரைப்பட துறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக சுமார் 125 படங்களில் நடித்துள்ளேன். எனக்கு கடந்த 2004ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது நான் சிகிச்சை பெற்ற மையத்தில் அழகப்பன் என்பவர் எனக்கு அறிமுகமானார். அழகப்பன், தன்னை என்னுடைய ரசிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு அவர் என்னுடைய வீட்டுக்கும், என்னுடன் தொலைபேசியிலும் பேசிவந்தார். நான் 17 வயது முதல் நடித்து சம்பாதித்த பணத்திலிருந்து என்னுடைய அம்மா ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுமார் 46 ஏக்கர் இடம் வாங்கியிருந்தார். எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சமயத்தில் அந்த இடத்தை விற்க முடிவு செய்தோம். அப்போது எனக்கு அறிமுகமான அழகப்பன், தான் தமிழ்நாடு முழுவதும் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் எனது இடத்தை விற்று தருவதாகவும் கூறினார். 

எனவே அவரை நம்பி என்னுடைய இடத்தை விற்கும் பொறுப்பையும் மேலும் எனக்குச் சொந்தமான நிலங்களின் அசல் பத்திரங்கள், தாய் பத்திரங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் அழகப்பனிடம் ஒப்படைத்தேன். என்னுடைய உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், நான் தொழில் நிமித்தமாக பரபரப்பாக இருந்ததாலும் என்னால் நில விற்பனையில் ஈடுபட முடியாமல் போனதால், அழகப்பனை நம்பி அவர் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டேன்.

அதோடு வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகிய அலுவலகங்களில் நில மாற்றம் செய்ய வசதியாக சில வெற்று தாள்களிலும் முத்திரைத் தாள்களிலும் அழகப்பன் என்னிடம் கையெழுத்து பெற்றியிருந்தார். அதை தேவைப்பட்டால் மட்டுமே உபயோகிப்பதாகவும், இல்லையென்றால் திரும்பக் கொடுத்து விடுவதாகவும் அழகப்பன் என்னிடம் உறுதியளித்திருந்தார். இந்தச் சூழலில் நீலாங்கரையில் 15,895 சதுர அடி நிலம் விற்பனைக்கு வருவதாகக் கூறிய அழகப்பன், அந்த இடத்தை வாங்க என்னைக் கட்டாயப்படுத்தினார். 

அந்த இடத்தை 3.90 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு வங்கி மூலம் பணபரிவர்த்தனை நடந்தது. ஆனால் அந்த இடத்தை பதிவுசெய்ய என்னை அழகப்பன் அழைத்துச் செல்லவில்லை. அதனால் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அது குறித்து அழகப்பனிடம் கேட்டதற்கு, கொரோனா காலம் என்பதால் என்னிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் மூலம் பத்திரத்தை பதிவு செய்துவிட்டதாக அழகப்பன் தெரிவித்தார். ஆனால் அந்த இடத்துக்கான அசல் ஆவணத்தை என்னிடம் அவர் தராமல் இழுத்தடித்து வந்தார். அதன் பிறகு இடம் தொடர்பாக நான் விசாரித்தபோதுதான், நான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

நீலாங்கரை இட ஆவணத்தில் என்னுடைய பெயர் மற்றும் அவரின் மனைவி நாச்சாள் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அது குறித்து நான் அழகப்பனிடம் கேட்டபோது, இடத்தை பாகபிரிவினை செய்து தருவதாகத் தெரிவித்தார். இதுதவிர இன்னும் சில மோசடிகளில் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டது தெரியவந்தது. எனக்கு கிடைத்த ஆவணம் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில் அழகப்பனும் அவரின் மனைவி நாச்சாள், மகன் சிவ அழகப்பன், சிவ அழகப்பனின் மனைவி ஆர்த்தி, அழகப்பனின் உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து 83 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. எனவே அழகப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து  அழகப்பன் மற்றும் குடும்பத்தினரை தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த அழகப்பன் மற்றும் குடும்பத்தினர் என ஆறு பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர்,திருவண்ணாமலை காஞ்சிபுரம், ராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின்  சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித் தனியாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடிகை கௌதமி இரண்டு புகார்களை அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளை அழகப்பன், ரகுநாதன் சுகுமாரன் பலராமன் ஆகிய நான்கு பேர் மீது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் உள்ள 1.07 ரூபாய் கோடிமதிப்புள்ள தனது நிலத்தை கவனித்துக் கொள்வதாக பவர் அதிகாரம் பெற்று 60 லட்சத்துக்கு மோசடியாக விற்பனை செய்ததுடன் அதற்கான தொகையையும் தனக்கு கொடுக்கவில்லை என்று கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் அழகப்பன், பலராமன் ஆகிய 2 பேர்மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் கவுதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி அதிகாரம் பெற்று ரூ.60 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் இதனை சில மாதங்கள் கழித்து 1 கோடி 63 லட்சத்துக்கு  விற்றுள்ளனர். மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத்தொகையையும் ஸ்ரீகாந்துக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பாக கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் இருக்கும் அழகப்பனை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்று மற்ற மாவட்டங்களில் போடப்பட்ட வழக்குகளிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow