Nellai : சக மாணவருக்கு அரிவாள் வெட்டு.. மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்!

Students Attack in Nellai District School : நெல்லை மாவட்ட பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவரை சகமாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம், மீண்டும் ஒரு நாங்குநேரி நிகழ்வா என்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aug 3, 2024 - 02:46
Aug 3, 2024 - 16:54
 0
Nellai : சக மாணவருக்கு அரிவாள் வெட்டு.. மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்!
சக மாணவருக்கு அரிவாள் வெட்டு

Students Attack in Nellai District School : கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவரையும், அவரது சகோதரியையும் சாதி வெறியால் வீடுபுகுந்து அரிவாளால் சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின்போதே நெல்லை மாவட்டத்தில் நிகழும் சாதிய வன்மம் குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் கவனம் செலுத்துவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதே நாங்குநேரி பகுதியில் மீண்டும் மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

9ம் வகுப்பு படிக்கும் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த ஒரு மாணவரின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீர் சக மாணவர் ஒருவர் மீது சிந்தியுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாங்குநேரி மாணவர் தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாளை மறுநாள் பள்ளிக்கு எடுத்துவந்து மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மாணவரின் தலையில் வெட்டி விட்டுத் தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயப்பட்ட மாணவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், அற்ப தகராறுக்காக அரிவாள் வெட்டு விழுந்ததா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சாதிய வன்மம் உள்ளதா என்னும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் பொறுமையும் சகிப்புத்தனமையும் இல்லாததே, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்று கூறும் கல்வியாளர்கள்,  பள்ளிகளில் மனநல ஆலோசகர் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாவே பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

“சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்...” என்று கற்க வேண்டிய குழந்தைகள் இன்று இந்த சமூகத்தின் கொடிய பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், “நகர்ப்புறத்தில் இருக்கும் மாணவர்களை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் மனங்களில் வன்முறை அதிகம் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதற்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. மாணவர்களைப் போலவே பெற்றோர்களுக்கும் பள்ளிகளில் அவ்வப்போது மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow