Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் என்ற பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலையில் மர்ம நபர்கள் சிலர், அப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை உடனடியாகப் பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுனர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக பள்ளிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். ஒரு சில மணி நேர தீவிர சோதனைக்கு பின் வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “பள்ளியின் ஏதோ ஒரு இடத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவே இ-மெயில் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வெடிகுண்டு சோதனை நிபுனர்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டோம். சந்தேகிக்கும் விதமாக எந்த ஒரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு போலியான இ-மெயில். பொதுமக்களையும் காவல்துறையையும் டெல்லி அரசாங்கத்தையும் பதற்றத்துக்குள்ளாக்கவே சில மர்ம நபர்கள் வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இ-மெயிலின் ஐபி அட்ரெஸ் மூலம் விசாரித்ததில் ஹங்கேரி நாட்டில் உள்ள இடத்தைக் குறிக்கிறது. குற்றவாளிகளை கூடிய விரைவில் கண்டுபிடிக்க காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் ஷாலினி அகர்வால், “வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு நள்ளிரவே இ-மெயில் வந்துள்ளது. ஆனால் நாங்கள் அதை காலையில்தான் பார்த்தோம். இதனால் அடுத்த 10 நிமிடங்களிலேயே மாணவ மாணவிகள் அனைவரையும் பத்திரமாக பள்ளியை விட்டு வெளியேற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டோம். இதையடுத்து உடனடியாகக் காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தோம்” என கூறினார்.
மேலும் படிக்க: 6 நாட்களுக்கு மழை.. பயங்கர சூறாவளி காற்றும் வீசுமாம்
அண்மைக் காலமாகவே தலைநகரின் பல்வேறு பகுதிகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அவ்வப்போது வருவது மக்களையும் அரசாங்கத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 150 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இ-மெயில்கள் வந்தன. ஆனால் அவை அனைத்தும் போலியான இ-மெயில்கள் என கண்டுபிடிக்கப்பட்டன. இதே போல, பிரபல மருத்துவமனைகளுக்கும் டெல்லி விமான நிலையத்துக்கும் மிரட்டல்கள் விந்தன. “வாழ்வா சாவா என்ற பதற்றத்தில் எப்போதும் இருப்பது வேதனையளிக்கிறது. நிம்மதியாகக் குழந்தைகளை பள்ளிகளுக்குக் கூட அனுப்பமுடியவில்லை. எனவே அரசாங்கம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.