இந்தியா

இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மும்பை வரும் BTS இசை குழு?

தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மும்பை வரும் BTS இசை குழு?
BTS group coming to Mumbai
உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். (BTS - Bangtan Boys), 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நிகழ்ச்சி நடத்த திட்டம்

பி.டி.எஸ். குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

'வி'-யின் உற்சாகத் தகவல்

இந்தியா வருகை குறித்த எதிர்பார்ப்புகளை மேலும் தூண்டும் வகையில், கடந்த 27ஆம் தேதி அன்று ஒரு நேரலை நிகழ்ச்சியில் பி.டி.எஸ். குழுவின் உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung - V), "நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று கூறியது இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவப் பணிக்குப் பின் உலகச் சுற்றுப்பயணம்

பி.டி.எஸ்-ன் ஏழு உறுப்பினர்களும் (ஆர்.எம், ஜின், சுகா, ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக்) தங்கள் கட்டாய இராணுவப் பணியை 2025 ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய உள்ளனர். அதன் பிறகு, அவர்கள் புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட உலகச் சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HYBE நிறுவனத்தின் இந்திய பிரவேசம்

பி.டி.எஸ்-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் 'HYBE India' என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. இது, பி.டி.எஸ். போன்ற பெரிய குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த இசைக்குழுவின் நிறுவனமான BIGHIT MUSIC அல்லது HYBE, இந்தியாவுக்கான தேதிகள் அல்லது இடங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.