Rajinikanth Praised Director Nithilan Saminathan : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ்ஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன், கூலி படங்களில் பிஸியாக இருந்தாலும், அம்பானி இல்ல திருமணம், லூலு மால் அதிபர் யூசுப் அலி இல்ல திருமண விழா ஆகியவற்றிலும் ரஜினி தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா(Maharaja) படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார், இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, சிங்கம் புலி, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா, யாருமே எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஹீரோ, வில்லன் என வெரைட்டியாக எல்லாவிதமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் நன்றாக இல்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மகாராஜா படம் பற்றி யாருக்கும் பெரிதாக நம்பிக்கையில்லாமல் இருந்தது. ஆனால், சொல்லி அடித்த கில்லி போல மகாராஜா படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நான்லீனியர் திரைக்கதையில் மகாராஜா படத்தை தரமாக இயக்கியிருந்தார் நித்திலன் சாமிநாதன். இதனால் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்த மகாராஜா, ஓடிடியில் வெளியான பின்னரும் சக்கைப்போடு போட்டது.
மேலும் படிக்க - தனுஷ் மீதான நடவடிக்கை... தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி
ரசிகர்கள் அனைவருமே இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் திரைக்கதை தான் மகாராஜா படத்தின் வெற்றிக்கு காரணம் என பாராட்டினர். இதனால் நித்திலனின் அடுத்தப் படம் என்ன, யார் ஹீரோ என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகாராஜா படம் பார்த்த பின்னர், இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுபற்றி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள நித்திலன் சாமிநாதன், அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடனான சந்திப்புக்கு மிக்க நன்றி. மேலும், உங்களது அனுபவம் புரிதல் எல்லாவற்றையும் நினைக்கும் போது, ஒரு நாவலை படித்தது போன்ற நல்ல அனுபவமாக இருந்தது.
அதேபோல், உங்களது பெருந்தன்மையும் உபசரித்த விதமும் பார்க்கும் போது, உங்களுக்கு மகாராஜா படம் எவ்வளவு பிடித்துள்ளது என்பதை உணர முடிகிறது. மீண்டும் என் தலைவருக்கு நன்றிகள் என ட்வீட் செய்துள்ளார். அதோடு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நித்திலன் சாமிநாதன். இதனால் ரஜினியுடன் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இணைய வாய்ப்பிருக்குமா எனவும் நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர். முன்னதாக தளபதி விஜய்யும் மகாராஜா படத்தை பார்த்துவிட்டு நித்திலன் சாமிநாதனை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனை அழைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 | #Rajinikanth #nithilansaminathan @rajinikanth @Dir_Nithilan #Tamilcinema #Cinemanews #CinemaUpdate pic.twitter.com/qIU8S94nAz
— KumudamNews (@kumudamNews24x7) August 2, 2024