TN Film Producers Council on Actor Dhanush Issue: கடந்த வாரம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகி 8 வாரங்களுக்கு பின்னரே OTT தளங்களில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அதில் தனுஷ் மீதான நடவடிக்கையாக தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவுகள், திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளார். அதனால் இனிவரும் காலங்களில் தனுஷின் புதிய படங்களின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக, அதன் தயாரிப்பாளர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அவர்களது படங்களில் நடிக்காமல், வேறு படங்களில் கமிட்டாகிவிடுவதாக சர்ச்சைகள் எழுந்தன. அதன் காரணமாகவே தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை கண்டித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேட்டி கொடுத்திருந்தார். அதில், நடிகர் சங்கமும் தயாரிப்பாளர்கள் சங்கமும் இதுவரை அனைத்து பிரச்சினைகளையும் கலந்து ஆலோசித்து தீர்வு எடுத்து வருகிறது. ஆனால், தற்போது வெளியான தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கை தன்னிச்சையாக முடிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்திடம் எந்தவித புகாரும் கொடுக்காமல் அவர்களாகவே முடிவு எடுத்துள்ளனர். அதேபோல், தனுஷ் மீதான புகார் பற்றி இதுவரை தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை. தனுஷ் மீதான நடவடிக்கைகளை அவர்களே முடிவு செய்ய முடியாது எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த புகாரும் அளிக்கவில்லை என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த ஓராண்டுக்கு முன்னர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை, பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய ஐந்து நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதுபற்றிய தகவல்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கும் தெரியப்படுத்தி, அது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
அதுமட்டும் இல்லாமல் கடந்த ஓராண்டாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், 5 நடிகர்கள் மீதான நடவடிக்கைகள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பிரச்சினைகளுக்கு எதிராக நடிகர் சங்கத்தினர் எந்தவித தீர்வும் எடுக்கவில்லை. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நவம்பர் 1ம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தவுள்ள ஸ்ட்ரைகிற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு அந்த வரிசையில் நடிப்பது தான் மரபு. ஆனால், அவ்வாறு இல்லாமல் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பது எப்படி நியாயமாகும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க - தேவி ஸ்ரீ பிரசாத் நெட்வொர்த்
அதேபோல், கால்ஷீட் விஷயத்திலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை நடிகர்கள் கடைபிடிப்பது இல்லை. நடிகர்களின் சம்பளமும் படப்பிடிப்பு செலவுகளும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. இதனால் மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை. அதேபோல், ஓடிடி, சாட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக தயாரிப்பாளர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கவே, கனத்த இதயத்துடன் அப்படியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்துகொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என நம்புவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.