Aadi Perukku 2024 : கல்யாண வரம் தரும் ஆடிப்பெருக்கு.. பொங்கி வந்த காவிரி... உயிர் பெற்ற ஆறுகள்.. கோலாகல கொண்டாட்டம்

Aadi Perukku 2024 : ஆடிப்பெருக்கு நாளில் புதுமண தம்பதிகள் தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலை உள்ளிட்டவற்றை காவிரி கரையில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதே போல் பெண்கள் காவிரி கரையில் சுமங்கலி பூஜை செய்து, புதிய தாலி கயிறு அணிந்து கொண்டனர்.

Aug 3, 2024 - 07:51
Aug 3, 2024 - 12:20
 0
Aadi Perukku 2024 : கல்யாண வரம் தரும் ஆடிப்பெருக்கு.. பொங்கி வந்த காவிரி... உயிர் பெற்ற ஆறுகள்.. கோலாகல கொண்டாட்டம்
Aadi Perukku 2024

Aadi Perukku 2024 : பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே. நீருக்கு நன்றி தொிவிக்கும் விழாவே ஆடிப்பெருக்கு. ஆடி 18ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆற்றங்கரைகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிப்பெருக்கு. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் ஆறுகள் உயிர்பெற்று ஓடுவதால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

காவிரி ஆறு தமிழகத்தில் கால் பதிக்கும் ஒகேனக்கல்லில் இருந்து வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. காவிரிக்கு ‘தட்சிண கங்கை' என்கிற சிறப்புப் பெயர் உண்டு. அதாவது, தெற்கே பாய்கிற புனிதமான கங்கைதான் இந்தக் காவிரி. இந்த நதியில் அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன. ‘காவிரியில் நீராடினால் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கி விடும்' என்று ராம பிரானுக்கு வசிஷ்டர் சொல்லி இருக்கிறார். இவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட ராமபிரானும் ராவணனைக் கொன்ற பாவம் தீர காவிரியில் நீராடினான் என்றும், அந்த நாளே ஆடிப்பெருக்கு என்கிற தகவலும் ஆன்மிக நூல்களில் காணப்படுகின்றன.

ஆடிப்பெருக்கு கோலாகலம்

ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. திருச்சி,ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர். காவிரி ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் ஏராளமானோர் அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரையில் திரண்டு வந்து படையலிட்டு வழிபட்டனர்.

காவிரி டெல்டாவில் கொண்டாட்டம்:

தஞ்சை மாவட்டம், திருவையாறு புஷ்பமண்டப படித்துறை அதிகாலை 5.30 மணிக்கே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புனித  நீராடிய பக்தர்கள் அனைவரும் ஐயாறப்பரை தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர், தொட்டியம், முசிறி, முக்கொம்பு, ஜீயபுரம், திருப்பராய்த்துறை, கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை, மாயனூர், குளித்தலை, தஞ்சை மாவட்டம் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் ஆகிய இடங்களிலும் பல்லாயிரகணக்கான மக்கள் ஆடிப்பெருக்கு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். 

காவிரிக்கு படையல்:

ஆடிப்பெருக்கு வழிபாடுகளில் முக்கியமானது சுமங்கலி பூஜை . துலாக்கட்ட காவிரி படித்துறையில் வாழை இலை விரித்து, அதில் விளக்கேற்றி, புது தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் பழங்கள் என மங்கல பொருள்கள் வைத்து காவிரி அன்னையை நினைத்து வழிபாடு செய்தார்கள். காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருள்களைக் காவிரித் தாய்க்கு சீர்வரிசையாக அளித்தனர்.  வயது முதிர்ந்த சுமங்கலி மூதாட்டியின் கையால் புது தாலிக்கயிற்றைப் பெற்று அணிந்துகொண்டார்கள். திருமணம் ஆகாத ஆண்களின் கைகளிலும் பெண்களின் கழுத்துகளிலும் மஞ்கள் நூலைக் கட்டிவிட்டனர். பச்சரிசியுடன், சர்க்கரை, வெல்லம் கலந்து காவிரித் தாய்க்குப் படைத்த பிரசாதத்தைக் குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள். 

புதுத்தாலி மாற்றிய பெண்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் புதுமணதம்பதிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், வயது மூத்த பெண்கள் அனைவரும் அதிகாலையிலேயே முளைப்பாரி, பூஜை பொருட்கள் மற்றும் திருமணத்தின்போது அணிந்த மாலைகள் ஆகியவற்றுடன் ஆற்றுக்கு வந்தனர். காவிரியில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து முளைப்பாரி, மாலைகளை ஆற்றில் விட்டு விட்டனர். காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி

கடந்த ஆண்டு திருமணமான புது தம்பதியினர் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் கொண்டு வந்து காவிரியில் விட்டு வழிபட்டனர். காவிரித் தாய் சமுத்திர ராஜனுடன் சங்கமிக்கும்போது இந்தத் திருமண மாலைகளும் அதனோடு சேர்ந்து செல்வதால் தம்பதியினர் வாழ்வில் சந்தோஷமாகச் சங்கமிப்பர் என்பது நம்பிக்கை.

எடப்பாடியில் நீராட தடை:

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை படித்துறை, படகுதுறை, காவிரித்தாய் சன்னதி, சன்னதி, படித்துறை விநாயகர் சன்னதி மற்றும் கதவணை பகுதி உள்ளிட்ட பல்வேறு காவேரி கரை பகுதிகளில் ஆடிப்பெருக்கு காலங்களில் பெரும் திரளான பக்தர்கள் வருகை தந்து, தங்கள் குல தெய்வங்களுக்கு வழிபாடு செய்தும், உற்சவமூர்த்தி சிலைகளை காவிரி ஆற்றில் சுத்தம் செய்து, காவிரியில் புனித நீராடி கரைகளில் சிறப்பு பூஜைகள் செய்து காவிரி தாயை வணங்குவது வழக்கம்.

பெருக்கெடுத்த வெள்ளம்

இந்நிலையில் நடப்பு ஆண்டில் காவிரி ஆற்றில் மிக அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப்பெருக்கு தினத்தில், பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராட காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும்  பூலாம்பட்டி படித்துறை, படகுத்துறை, அணைப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முழுவதுமாக  தடுப்புகளை அமைத்துள்ள போலீசார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு விழா கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். ஆனால் கடந்த ஆண்டில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் தற்பொழுது வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி நொய்யல் மற்றும் பவானி ஆறு மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். 

இதைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் ஆற்றில் இறங்கி நீராடாமல் அருகில் உள்ள குளியல் அறைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் இருந்து குளித்து சென்றனர். ஆற்றின் படித்துறையில் சுமங்கலி பெண்கள், புதுதாலி கயிறு மாற்றி கொண்டனர். இதே போல் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் சுவாமி - பச்சை நாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு

ஒகேனக்கல்லில் ஆடிபெருக்கு விழா தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் தமிழக வேளான்மை துறை அமைச்சர் பங்கேற்று 367 நபர்களுக்கு 8 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னதாக அரசு சார்பில் பல்துறை விளக்க கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் செய்தி விளம்பரத்துறை, வனத்துறை, வேளான் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட அரங்குகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பின்னர் மலைகிராம மக்கள் பயன்பெரும் வகையில் கூட்டுறவுதுறை சார்பில் வாகனம் மூலம் பொருட்கள் விற்பனையை துவக்கிவைத்தார். மேலும் இவ்விழாவில் கலை பண்பாட்டுதுறையினரின் நடனம் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் திரு, ஆ.மணி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow