சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா.. கனகசபை மீது ஏறி கண்குளிர தரிசித்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம்போல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 10, 2024 - 11:52
Jul 10, 2024 - 14:51
 0
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா.. கனகசபை மீது ஏறி கண்குளிர தரிசித்த பக்தர்கள்
Aani Tirumanjanam In Chidambaram

ஆனி உத்திரம் நாளில் ஆடல்வல்லான் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். குளிர குளிர பலவகை வாசனை திரவியங்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்ய சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருகைத் தருவார்கள். 

ஆனி உத்திரம் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரமான வரும் ஜூலை 11ம் தேதி மதியம் 1.47 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஜூலை 12ம் தேதி மாலை 4.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது. சூரிய உதயத்தின்போது எந்த நட்சத்திரத்தில் தொடங்குகிறதோ அந்த நாள் முழுவதும் அதே நட்சத்திரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி உத்திர நட்சத்திரம் ஜூலை 11ம் தேதி பிறந்தாலும், ஆனி உத்திரம் ஜூலை 12ம் தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நடப்பாண்டு ஆனி உத்திரத்தில் வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருகிறது. சஷ்டியானது முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் ஆகும். ஆனி உத்திர தினத்திலே வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமான் – முருகப்பெருமான் இருவரையும் வணங்குவது தனிச்சிறப்பாகும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை என உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்திருந்தது. விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு பூஜைகள் தொடங்கின. நாளை முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதனால் இன்று நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம்போல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow