Euro Cup 2024: யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின்... பரிதாபமாக வெளியேறிய பிரான்ஸ்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

Jul 10, 2024 - 12:09
Jul 10, 2024 - 14:49
 0
Euro Cup 2024: யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின்... பரிதாபமாக வெளியேறிய பிரான்ஸ்!
Euro Cup Semi Final 2024

முனிச்: 2024ம் ஆண்டுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னேறின. இதனையடுத்து முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் ஸ்பெயினும் மோதின. நட்சத்திர வீரர்கள் அதிகமுள்ள இரண்டு அணிகளுமே யூரோ கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. இதனால் அரையிறுதிப் போட்டியில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது பிரான்ஸ். அந்த அணியின் கேப்டன் எம்பாப்பே பெனால்டி ஏரியாவில் இருந்தபடி, கிராஸில் ஒரு பாஸ் கொடுத்தார். அந்தரத்தில் பறந்து சென்ற அதனை, ராண்டல் கோலோ முவானி தலையால் முட்டி கோல் அற்புதமாக அடித்தார். போட்டி தொடங்கியதுமே ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணியை உளவியல் ரீதியாக அட்டாக் செய்தது பிரான்ஸ். ஆனால் கோல் விழுந்த சில நொடிகள் மட்டுமே அதிர்ச்சியில் உறைந்து நின்ற ஸ்பெயின் வீரர்கள், அதே அதிர்ச்சியை வட்டியும் முதலுமாக பிரான்ஸ்க்கும் திருப்பிக் கொடுத்தனர். அதன்படி ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமல், 21வது நிமிடத்தில் கோல் அடித்தார். 

ஆம்! 16 வயதே ஆன ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமல், பெனால்டி பாக்ஸின் வெளியே இருந்து ஒரு கிக் விட, பிரான்ஸ் கோல் கீப்பருக்கு வாய்ப்பே கொடுக்காமல் கோலானது. சுமார் 20 அடி தூரத்தில் இருந்து இந்த கோலை அடித்து அற்புதம் நிகழ்த்தினார் லாமின் யமல். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் லாமின் யமல் அசிஸ்ட் செய்த பந்தை ஸ்பெயின் வீரர் டேனி ஓல்மோ கோலாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரான்ஸ்க்கு பதில் கோல் திருப்பிய ஸ்பெயின் வீரர்கள், வெற்றிக்கான அடுத்த கோலையும் அடுத்த சில நிமிடங்களிலேயே அடித்தனர்.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் டேனி ஓல்மோ இன்னொரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின்னர் இரு அணி வீரர்களும் பலமாக போராடினர். முக்கியமாக பிரான்ஸ் வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. எம்பாப்பே உட்பட பிரான்ஸ் வீரர்கள் அனைவரும் எப்படியாவது ஸ்பெயினை வீழ்த்தி விட வேண்டும் என போராடினர். அதற்கேற்ப அவர்களுக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனாலும் ஸ்பெயின் வீரர்களின் தடுப்பாட்டத்துக்கு முன்னால் பிரான்ஸ் வீரர்களால் தங்களது முயற்சிகளை கோலாக மாற்ற முடியவில்லை. இதனையடுத்து ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதியில் அமெரிக்க வீரர் டாமி பவுலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்பெயின் கால்பந்து அணியும் பைனலுக்கு சென்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதுவரை 4 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள ஸ்பெயின் அணி, 3 முறை கோப்பையை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றிரவு நடைபெறும் இன்னொரு அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றிப் பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மோதவுள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow