ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!
''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''
சென்னை: கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''முதலமைச்சர் ஸ்டாலின் சம்பவம் நடந்தவுடன் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்துள்ளார்'' என்றார். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது என ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது.
தன் மீது அவதூறு பரப்பி வரும் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி இன்று அண்ணாமலை, சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.பாரதி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறுகையில், ''திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்னைபற்றி கூறியது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஆர்.எஸ்.பாரதி எல்லை கடந்து பேசிவிட்டதால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன்.
ஆர்.எஸ்.பாரதி ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த ரூ.1 கோடியை பெற்று கள்ளக்குறிச்சியில் போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் அமைக்கப்படும். ஆர்எஸ் பாரதி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். அவருக்கு விரைவில் சம்மன் செல்லும்.
இந்த வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக ஆர்.எஸ்.பாரதியை யாரும் எதிர்த்து பேசுவதில்லை. இதனால் அவர் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுக கூட்டணிக் கட்சிகளே சிபிஐ விசாரணை கேட்கின்றன.
மடியில் கனம் இருப்பதால் தமிழகத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள தனது அனுமதி வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினின் முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார். டாஸ்மாக்கிற்கு சாராய ஆலை மூலம் சாராயம் வழங்குவது யார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சிபிஐ விசாரித்தால்தான் தெரியவரும்'' என்றார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையுடனான மோதல் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ''செல்வப்பெருந்தகை குறித்து நானாக கூறவில்லை. எங்கள் கட்சி கூறிய பிறகே அவரது வழக்கு விவரங்களை வெளியிட்டோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் செல்வப்பெருந்தகை மீது வழக்கு போடப்பட்டது.
ஆனால் அவர் ஆர்எஸ்எஸ், பாஜக மீது குற்றம்சுமத்தி வருகிறார். இந்தியாவில் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். நான் சண்டை போட்டால்தான் தமிழக அரசியல் திருந்தும் என்றால்,அதற்கு என்னை அர்ப்பணிக்க தயார். என்ன வந்தாலும் சந்திக்க தயார்'' என்றார்.
தொடர்ந்து வெளிநாட்டு பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, 'இது குறித்து விரைவில் கூறுகிறேன்' என்று தெரிவித்தார்.
What's Your Reaction?