India vs Sri Lanka T20 series 2024 Match Live Streaming : இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை டூர் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். கடந்த டி20 சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த கையோடு, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார். அதேபோல், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனையடுத்து இந்திய டி 20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.
2026 டி20 சாம்பியன்ஷிப் தொடர் வரை சூர்யகுமார் யாதவ் தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என இலங்கை சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமத், யாஷ்வி ஜெய்ஸ்வால், முஹம்மது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரியான் பராக், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த டி 20 அணியில் இடம்பிடித்துள்ளனர். முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நடந்து முடிந்த டி20 சாம்பியன் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் ஹசரங்கா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அசலங்கா இலங்கை டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா பொறுப்பேற்றுள்ளார். எனவே இலங்கை அணியும் புதிய நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஐபிஎல் தொடர் போல, இலங்கையிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது.
அதில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்கள், இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை எந்த சேனலில் பார்க்க முடியும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக தேடி வருகின்றனர். அதன்படி இந்தியா – இலங்கை டி20 கிரிக்கெட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம். அல்லது சோனி லிவ் ஓடிடியிலும் இந்தப் போட்டியை பார்க்க முடியும். ஆன்லைனிலும் இலவசமாக இப்போட்டியை பார்க்க வேண்டும் என்றால், ஜியோ டிவி ஆப் மூலம் சோனி சேனலை செலக்ட் செய்து பார்க்கலாம்.
பயிற்சியாளராக கம்பீருக்கும் கேப்டனாக சூர்ய குமார் யாதவ்க்கும் இந்தத் தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டி20 தொடரை அடுத்து ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்கு சவால்கள் காத்திருக்கின்றன. அதிலும் இந்திய அணி வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.