Chennai Beach To Tambaram Electric Train Cancelled : பாரமரிப்பு காரணங்கள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்கள் தங்கள அன்றாட பயன்பாட்டுக்கு அதிகம் நம்பியுள்ளது மின்சார ரயில்களை தான். அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் சென்னை மக்களின் மிக நம்பிக்கைக்குரிய வாகனப் போக்குவரத்தாக மின்சார ரயில்கள் இருக்கின்றன. கடற்கரை முதல் தாம்பரம், கடற்கரை முதல் செங்கல்பட்டு என இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை பீச் டூ தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் துயராக அமைந்துள்ளது.
அதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் வரும் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10.00 மணி முதல் 11.59 வரையும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடற்கரையில் இருந்து செல்லும் ரயில்கள் பல்லாவரம் ஸ்டேஷன் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரும் ரயில்கள், கூடுவாஞ்சேரி ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே 20 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கியமாக, தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26, 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில், பொது ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு கூடுதலாக 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதெபோல், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராயநகர், பிராட்வேக்கு ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என, மொத்தம் 70 பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து சார்பில் இயக்கப்பட உள்ளன.
மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 14ம் தேதி வரை மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து கூடுதல் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார ரயில்களில் பயணித்து வந்த பொதுமக்கள் பயன்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - மன உளைச்சலில் செந்தில் பாலாஜி
அதேபோல் சென்னை சென்ட்ரல் மூா் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்றும் திங்கட்கிழமை (ஆக.3, 5) ரத்து செய்யப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 | #TRAIN | #Chennai | #Tambaram | #TodayNews | #NewsUpdates | #UPDATE | #Transportation | #southernrailway | #TNGovt | #govtbus | pic.twitter.com/UlXgHQkqtS
— KumudamNews (@kumudamNews24x7) August 3, 2024