Lakshaya Sen: ஒலிம்பிக் பேட்மிண்டன்... அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென்... வாவ்! தரமான சம்பவம்

Lakshaya Sen in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் லக்சயா சென் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

Aug 3, 2024 - 08:50
Aug 3, 2024 - 12:21
 0
Lakshaya Sen: ஒலிம்பிக் பேட்மிண்டன்... அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென்... வாவ்! தரமான சம்பவம்
ஒலிம்பிக் பேட்மிண்ட்டன் அரையிறுதியில் லக்சயா சென்

Lakshaya Sen in Paris Olympics 2024 : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்ட்டன் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி காலிறுதிப் போட்டியில், சீனாவின் நட்சத்திர வீரரான செள டியான் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் லக்சயா சென். பேட்மிண்ட்டன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த இப்போட்டியில், லக்சயா சென் வெற்றிப் பெறுவது அவ்வளது எளிதானது கிடையாது என விமர்சகர்கள் கூறியிருந்தனர். அதன்படி, ஆட்டம் தொடங்கியதுமே முதல் செட்டில் ஆக்ரோஷமாக விளையாடினார் சீன வீரர் செள டியான் சென். 

இதனால் சீன வீரர் செள டியான் சென் முதல் செட்டில் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றார். இதனையடுத்து இரண்டாவது செட்டில் விஸ்வரூபம் எடுத்த லக்சயா சென், ஒவ்வொரு சர்வீஸிலும் சீன வீரர் டியான் சென்னுக்கு பதிலடி கொடுக்க முயற்சிகள் எடுத்தார். அதன்படி, முதல் சர்வீஸில் இருந்து புள்ளிகளை குவிக்கத் தொடங்கிய லக்சயா சென், அசுர வேகத்தில் இரண்டாவது செட்டை வெற்றியோடு நிறைவு செய்தார். 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீரர் செள டியான் சென்-ஐ வீழ்த்திய லக்சயா சென், ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் மீது இன்னும் எதிர்பார்ப்பு எழுந்தது. சொல்லி வைத்தாற் போல மூன்றாவது செட்டிலும் லக்சயா சென்னின் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் இரண்டு செட்களில் லக்சயா சென் – செள டியான் சென் இடையே அதிகமான ராலிகள் சென்றன. ஆனால், மூன்றாவது செட்டில் லக்சயா சென் அதிரடிக்கு முன்னால், செள டியான் சென்னின் ஸ்மாஷ் ஷாட்கள் செல்லா காசுகளாக மாறின. முதல் இரண்டு புள்ளிகளை தனதாக்கிய செள டியான் சென்னால், அதனை ஆட்டம் முழுக்க தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அந்தளவிற்கு செள டியான் சென்னின் ஸ்மாஷ் ஷாட்களை டிஃபென்ஸ் செய்தார் லக்சயா சென்.

மேலும் படிக்க - இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி டிரா

இதனால் ஒருகட்டத்தில் செள டியான் சென் அதிகளவில் தவறுகளை செய்ய, அது எல்லாமே லக்சயா சென்னுக்கு வெற்றிப் புள்ளிகளாக மாறியது. இறுதியாக மூன்றாவது செட் ஆட்டத்திலும் லக்சயா சென் 21-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று மாஸ் காட்டினார். இதன்மூலம் ஒலிம்பிக் பேட்மிண்ட்டன் போட்டியில் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சொந்தமாக்கினார் லக்சயா சென். இப்போட்டி சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் பேட்மிண்டனில் இதுவரை கிடாம்பி ஸ்ரீகாந்த், பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் மட்டுமே காலிறுதியில் விளையாடியுள்ளனர். இவர்களை அடுத்து காலிறுதி வரை அடியெடுத்து வைத்த லக்சயா சென், இப்போது அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளார்.         

இதனால், லக்சயா சென் இந்தியாவுக்கு பேமிண்ட்டன் போட்டியில் பதக்கத்தை வென்று தருவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அரையிறுதியில் விக்டர் அக்சல்சன் அல்லது கீன் யீ லோ ஆகிய இருவரில் ஒருவருடன் விளையாடவுள்ளார் லக்சயா சென். முன்னதாக நேற்றிரவு (ஆக.2) நடைபெற்ற ஆடவர் ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow