Elephants Saved Grandmother in Wayanad Landslide : நான்கு தினங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 344 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூரல்மலை, முண்டகை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட செய்திகள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அதேபோல், தற்போது கிடைத்துள்ள தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவர் கொடுத்துள்ள பேட்டி தான் அது. சுஜாதாவும் அவரது பேத்தியும் நிலச்சரிவின் போது வீட்டில் தனியாக இருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது வீடு இடிந்துவிடவே, தனது பேட்டியை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார் சுஜாதா.
ஆனால், அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 3 காட்டு யானைகள் இருப்பதை கண்டு சுஜாதா பதறியுள்ளார். இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அவர், அந்த காட்டு யானைகளிடம் “சாவில் இருந்து மீண்டு இங்கு உயிர்பிழைப்பதற்காக தஞ்சம் அடைந்துள்ளோம். தயவுசெய்து எங்களை விட்டுவிடு, எங்களை எதுவும் செய்துவிடாதே” என்பதாக மன்றாடியுள்ளார். பாட்டி சுஜாதாவின் மொழியை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவரின் உணர்வுகளில் இருத்த பயத்தை அறிந்த அந்த காட்டு யானைகள் கண் கலங்கியுள்ளன.
இதனால் சிறிது ஆசுவாசம் அடைந்த சுஜாதா, தனது பேத்தியுடன் அந்த காட்டு யானைகளின் காலடியிலேயே அமர்ந்துவிட்டாராம். ஆனாலும் அவர்களை எதுவும் செய்துவிடாமல் மூன்று யானைகளும் பத்திரமாக பாதுகாத்துள்ளன. அதோடு மறுநாள் மீட்புப் படையினர் சுஜாதாவையும் அவரது பேத்தியையும் மீட்கும் வரை, அந்த யானைகள் அவர்கள் அருகிலேயே நின்றுகொண்டு இருந்துள்ளன. அதுவரையும் அந்த யானைகள் அழுதபடி எதுவும் சாப்பிடாமல் அங்கேயே நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரொம்பவே உருக்கமான சுஜாதா, எந்த கடவுள் எங்களை காப்பாற்றியதோ தெரியவில்லை என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - வயநாடு நிலச்சரிவு... தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வயநாடு நிலச்சரிவில் பாட்டியையும் பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் என்ற செய்திகளை பார்த்திருக்கலாம். அதுமட்டும் இல்லாமல் வன பகுதிகளில் விவசாயம் பார்க்கச் சென்ற பலரை யானை மிதித்து கொன்ற செய்திகளும் படித்திருக்கலாம். ஆனால், வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பாட்டியையும் பேட்டியையும் யானைகள் காப்பாற்றியுள்ளன.