Warning : வயநாடு நிலச்சரிவு... தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!
Heavy Rain Warning in Tamil Nadu : வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Heavy Rain Warning in Tamil Nadu : கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேரிடரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ நெருங்கியுள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்த கட்டடங்கள் மொத்தமாக தரைமட்டமாகின. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. முண்டகை கிராமத்தில் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதனையடுத்து வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீட்புப் பணி, சேத விவரங்கள், மீண்டும் பேரிடர் நடைபெறாமல் தடுப்பதற்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும் கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை துறை, நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது. மழை எச்சரிக்கையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னையில் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிக்க - 100 வீடுகள் கட்டித் தர தயார்... ராகுல் காந்தி
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மலை கிராமங்களில் கனமழை பெய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை வருவாய் துறையும் பேரிடர் மேலாண்மைத் துறையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய்த்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
#JUSTIN | எழிலகத்தில் முதலமைச்சர் ஆய்வு | Kumudam News 24x7#cmstalinnews | #mkstalin | #kumudamnews24x7 pic.twitter.com/DpTO36zpZe — KumudamNews (@kumudamNews24x7) August 2, 2024
What's Your Reaction?