Rahul Gandhi Visit Wayanad : 100 வீடுகள் கட்டித் தர தயார்; ராகுல் காந்தி அதிரடி
Rahul Gandhi Visit Wayanad : வயநாடு நிலச்சரிவில் வீடுளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
Rahul Gandhi Visit Wayanad : கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் தற்போது ஒரு பேரழிவை சந்தித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்படியான சூழலில் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இடுபாடுகளில் சிக்கியவர்களை தற்போது வரை மீட்புக்குழுவினர் பெரும் போராட்டத்திற்கு நடுவில் மீட்டு வருகின்றனர். அதோடு வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி சாலியாற்றில் பல கிமீ தூரத்துக்கு ஏராளமான உடல்கள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று (1.8.2024) வயநாடு சென்றனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் வயநாடு சென்றடைந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை பகுதிகளுக்கு சென்றனர். தொடர்ந்து கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின் கோட் அணிந்து ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் வழியாக நடந்து சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து இன்றும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
மேலும் படிக்க: வயநாடு நிலச்சரிவு; நன்கொடை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “வயநாட்டில் நடந்ததுபோல இதுவரை கேரளா இப்படி ஒரு பாதிப்பை சந்தித்திருக்கவில்லை. எனது தந்தையை நான் இழந்தபோது என்னவொரு வலி அனுபவித்தேனோ அதே போன்ற ஒரு உணர்வும் வலியும் எனக்கு இந்த மக்களைப் பார்த்தபோது ஏற்பட்டது. நேற்று முதல் நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் இங்கேயே இருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறோம். மேலும், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தர நமது காங்கிரஸ் குடும்பம் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?