Nayanthara Vignesh Shivan Relief Funds To Wayanad Landslides : (God's Own Country) கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் தற்போது ஒரு பேரழிவை சந்தித்து வருகிறது. இயற்க்கையின் வாசம் ததும்ப ததும்ப நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் கேரளாவின் அழகு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கோடைக் காலத்தில் கொடைக்கானல், ஊட்டியை போலவே கேரளாவுக்கும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவர். அதில் குறிப்பாக கேரளாவின் வயநாடு பகுதி சுற்றுலா தளங்களின் ராணியாக விளங்குகிறது. ஒரு பக்கம் இப்படி இருந்தாலும் மறுபக்கம் ஒவ்வொரு மழைக்கும் கேரளாவின் பாடு பெரும்பாடாகவே இருந்து வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இப்படியான சூழலில் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரழிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இடுபாடுகளில் சிக்கியவர்களை தற்போது வரை மீட்புக்குழுவினர் பெரும் போராட்டத்திற்கு நடுவில் மீட்டு வருகின்றனர். அதோடு வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கேரள அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவாக பல திரைப்பிரபலங்கள் நன்கொடை வழங்கி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ. 20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “வயநாட்டில் நிகழ்ந்துள்ள இந்த பேரழிவில் சிக்கிய மக்களை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இதுபோன்ற சூழலில்தான் நாம் ஒருவரோடு ஒருவர் ஆறுதலாகவும் ஆதரவாகவும் நிற்க வேண்டும். மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த இந்த 20 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம். இதுபோன்ற இக்கட்டான சூழலிலும், ஓயாமல் உழைக்கும் அரசாங்கத்திற்கும், தன்னார்வலர்களுக்கும், மீட்புக் குழுவினருக்கும் மற்றும் மக்களுக்கு உதவும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் எங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் - விக்னேஷ் சிவன், நயன்தாரா, உயிர் மற்றும் உலக்” என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
கேரளாவைப் போலவே இம்முறை தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் உண்டாகியுள்ளது. இதில் சிக்கி பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.