ஆடி அமாவாசை .. சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி.. என்னென்ன ஏற்பாடுகள்?

Aadi Amavasai Darshan at Sathuragiri Temple : ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Jul 24, 2024 - 10:35
Jul 24, 2024 - 11:50
 0
ஆடி அமாவாசை .. சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி.. என்னென்ன ஏற்பாடுகள்?
Sathuragiri Sundaramahalingam temple

Aadi Amavasai Darshan at Sathuragiri Temple : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவில் பங்கேற்க ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கடந்த வாரம் ஆடி  மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு 19.7.24 முதல் 22.7.24 ஆம் தேதி வரை பக்தர்கள் நான்கு நாட்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர். தொடர் மழை காரணமாக  பக்தர்கள் தாமதமாக  மலை ஏற அனுமதித்தனர். விடுமுறை நாள் என்பதால்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம்  ஆகஸ்ட் 4 ஆம் தேதி வர உள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆடி அமாவாசை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

சதுரகிரி கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி முகேஷ் ஜெயகுமார்,"தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங், மலைப்பாதை ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். வாகன நிறுத்துமிடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும். 

தற்காலிக பேருந்து நிலையங்களில் வாகனங்கள் சென்று வர இரு வழிகளை ஏற்படுத்த வேண்டும். அடிவாரம் முதல் சதுரகிரி மலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று கூறினார்.சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், "ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் இடங்களில் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வயதானவர்கள் மலையேறுவதற்கும், உடல் நலம் பாதித்தவர்களை அடிவாரம் அழைத்து வருவதற்கும் டோலிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மலையேறும் போது பக்தர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சினைகளை தீர்க்க தேவையான மருந்துகளுடன் சுகாதார துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கழிப்பறை பற்றாக்குறை, போதிய பேருந்து இல்லாதது, சதுரகிரி மலையில் அனைவருக்கும் உணவு இல்லாதது போன்ற பல்வேறு குறைபாடுகளை சரி செய்து, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜூலை 27ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தப்படும். அப்போது, முன்னேற்பாட்டுப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து இருக்க வேண்டும் என பிரியா ரவிச்சந்திரன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow