ஆடி செவ்வாயில் தேடிக்குளி.. தீர்க்க சுமங்கலி வரம் தரும் ஔவையார் விரதம்.. ஆண்களுக்கு அனுமதியில்லை

Aadi Avvai Nombu 2024 : கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் ஆடி செவ்வாய்கிழமை(Aadi Chevvai) ஔவையார் விரதத்தினை கடைபிடிக்கின்றனர்.

Jul 23, 2024 - 05:00
Jul 23, 2024 - 10:44
 0
ஆடி செவ்வாயில் தேடிக்குளி.. தீர்க்க சுமங்கலி வரம் தரும் ஔவையார் விரதம்.. ஆண்களுக்கு அனுமதியில்லை
Aadi Avvai Nombu 2024

Aadi Avvai Nombu 2024 : ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் துர்கை மற்றும் முருகபெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் குழந்தை பாகியமும் கிடைக்கும். 

ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது. ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமண தடை நீங்கவும், திருமணம் ஆனவர்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும்  கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தினை கடைபிடிக்கின்றனர். 

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. 'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கையாகும். 

ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனயும் முருகனையும் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி செவ்வாயன்று எண்ணெய் தேய்த்து குளித்தால்  மங்கலம் தங்கும் என்பது மரபு.

ஆடி செவ்வாயில் ஔவையார் நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள். தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று  நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.

இந்த பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு தரக் கூடாது. இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம். பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று தென் மாவட்ட மக்களின் நம்பிக்கையாகும்.  சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் இன்றைக்கும் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow