'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Sep 6, 2024 - 14:52
Sep 7, 2024 - 10:08
 0
'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!
Tamilnadu Goverment School

சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகள் என்பது அனைவருக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும்;  அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திய நபர் மீதும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இதேபோல் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோரிடம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இருவரும் பணியிடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 'அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆசிரியரை அவமானப்படுத்திய அவரை சும்மா விட மாட்டேன்' என்று தெரிவித்தார்.  

இந்நிலையில், திமுக மாணவர் அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மாணவர்களிடம் மத-சாதிய வெறுப்புணர்வை விதைக்க வேண்டாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அந்த தீர்மானத்தில், ''கல்வியினுடைய குறிக்கோள் என்பது அறிவை வளர்க்க, நமது இழிவையும் முட்டாள்தனத்தையும் மூடநம்பிகையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக பேரறிஞர் அண்ணாஆட்சி காலம் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் –கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தொடர்கிறது.

அண்மைகாலமாக ஆன்மீகத்தின் பெயரால் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படும் சாதிய, மதவாத உணர்வுகளை முறியடித்து, இளைய தலைமுறையினரை அரசியல் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் தேடலோடு கூடிய (Scientific Temper) அறிவார்ந்த சமுதாயமாக கட்டமைத்திடவும், பகுத்தறிவுக் கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்து பெரியார், அண்ணா, கலைஞர் காணவிரும்பிய சமத்துவ சமுதாயத்தை நிறுவிடவும், தி.மு.க மாணவரணி கல்வி நிலையங்களில் அமைக்க இருக்கும் 'தமிழ்நாடு மாணவர் மன்றம்' உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow