டெல்லி: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யனை, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முன்னுரிமை அளித்து வருவதுடன், உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை ஆகிவற்றை ஆராய்ந்து, தமிழ் மொழியின் மேம்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக இரா.சந்திரசேகரன் பணியாற்றி வரும் நிலையில், தற்போது துணைத் தலைவராக சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன தலைவராக பொறுப்பேற்க உள்ள சுதா சேஷய்யன், 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 4 ஆண்டுகள் பணியாற்றிய சுதா சேஷய்யன், இலக்கியவாதி, ஆன்மீகப் பேச்சாளார் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முக முகம் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் புலமை பெற்று விளங்கிய இவர், ஆன்மிக சொற்பொழிகள் நிகழ்த்தியது மட்டுமின்றி வானொலி, தொலைக்காட்சிகளில் ஆன்மீக நிகழ்வுகளுக்கு வர்ணனையும் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியையும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தொகுத்து வழங்கிய சுதா சேஷய்யன், மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு நடைமுறைகளை சீர்திருத்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது தலைமையின்கீழ் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவி தொழில்நுட்பத்துக்கு தனி இருக்கை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிகச்சிறந்த இலக்கியவாதியாக திகழ்ந்த சுதா சேஷய்யன், அந்தக் கால மருத்துவர்கள், தேவாரத் திருவுலா (பாகம் 1, பாகம் 2), லெமுரியா குமரிக்கண்டம் உள்ளிட்ட பல்வேறு நுல்களை எழுதியுள்ளார். தனது சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ள சுதா சேஷய்யனுக்கு 2005ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.