கட்டாய கல்வி.. ஏழை மாணவர்களுக்கு கனவாகி போன சிபிஎஸ்இ பள்ளிகள்.. தமிழக அரசு கூறும் விளக்கம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளை சேர்க்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுதும், 5,000 பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் அரசுக்கு நிதிச்சுமையும் உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Jul 3, 2024 - 07:47
 0
கட்டாய கல்வி.. ஏழை மாணவர்களுக்கு கனவாகி போன சிபிஎஸ்இ பள்ளிகள்..  தமிழக அரசு கூறும் விளக்கம்
Madras High Court

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் ஏழை, நலிவடைந்த மாணவர்களுக்கு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25% இடஒதுக்கீ்டு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. அம்மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அந்தந்த பள்ளிகளுக்கு அரசே வழங்கி விடுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் இணைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவிகித இலவச சேர்க்கை நடத்துவதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல்கள் வெளியானது ஆனால் இதுவரைக்கும் எந்த சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இலவச சேர்க்கை நடைபெற வில்லை. 

கடந்த 2009 ஆம் ஆண்டில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் துாரத்துக்குள் வசிக்கவில்லை என விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கோவையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், இருப்பிடம் 1 கிமீ துாரத்துக்குள் இருக்க வேண்டும் என்பதை அதிகரிக்க வேண்டும் மாணவர்கள் சேர்க்கையை வெளிப்படையாக நடத்த வேண்டும். சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும், 25 சதவீதம் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டது.

இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம், 1 கி.மீ., துாரத்துக்குள் வசிக்கவில்லை என விண்ணப்பங்களை நிராகரிப்பது சரியல்ல. ஆந்திர மாநிலத்தில் இதுகுறித்து விதிகள் உள்ளன. 25 சதவீத ஒதுக்கீட்டில், சிபிஎஸ்இ, பள்ளிகளை சேர்ப்பதற்கு முடிவெடுக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி அரசு வாதங்களை முன் வைத்தார். தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக்குழு கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் 25 சதவிகித ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது.

அதே நேரத்தில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு, மாநில அரசின் கட்டண நிர்ணய குழு, கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. அதனால் அந்தப் பள்ளிகளை 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க இயலாது என்றார்.  1 கிலோமீட்டர் இடைவெளியில் அரசு தொடக்கப்பள்ளியும், 3 கிலோமீட்டர் இடைவெளியில் அரசு நடுநிலைப்பள்ளியும் உள்ளது. 

தமிழகம் முழுதும், 5,000 பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் அரசுக்கு நிதிச்சுமையும் உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, விண்ணப்பங்கள் நிராகரிப்பு, அதற்கான காரணங்கள் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட முதல் பெஞ்ச் விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow