சுப்புலட்சுமி, சரஸ்வதி யானைகள் உயிரிழப்பு.. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய குன்றக்குடி,பழனி மக்கள்

குன்றக்குடி யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அஞ்சலி செலுத்தினார்.

Sep 13, 2024 - 16:54
 0
சுப்புலட்சுமி, சரஸ்வதி யானைகள் உயிரிழப்பு.. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய குன்றக்குடி,பழனி மக்கள்
elephant death

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி யானை சுப்புலட்சுமியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைத்து இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பழனியில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்த சரஸ்வதி யானைக்கு பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலின் யானை சுப்புலட்சுமி.  கடந்த 1971ம் ஆண்டு முதல் சுப்புலட்சுமி  யானை வளர்க்கப்பட்டு வருகிறது. யானை சுப்புலட்சுமி பக்தர் ஒருவரால் குட்டியாக இருக்கும் போது அன்பளிப்பாக வழங்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

சுப்புலட்சுமி யானையை பராமரிக்க பிரத்தியேகமாக குன்றக்குடி மலை அடிவாரத்தில் தகரக்கொட்டகை ஒன்றும் உள்ளது. திடீரென நேற்று நள்ளிரவில் இந்த கொட்டகையில் தீப்பிடித்ததால். வெப்பம் தாங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் யானை பிளிறியது. யானை ஒரு கட்டத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்துவிட்டது. கோவில் காவலாளி மற்றும் பாகன் உள்ளிட்டோர் ஓடிவந்து பார்ப்பதற்குள் கொட்டகை பெருமளவு எரிந்துவிட்டது. யானைக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து யானையை ஆசுவாசப்படுத்தினர். யானையின் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்தததால் யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காயத்திற்கு மருந்து போடப்பட்டது.

எனினும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தது.  சுப்புலட்சுமி யானையின் உடல் குன்றக்குடி மடத்தில் வைக்கப்பட்டிருந்தது அதற்கு  தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அதிகாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

யானை உயிரிழந்த காரணத்தால் குன்றக்குடி கிராமம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து  அஞ்சலி செலுத்தினர் அதன் பின்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மலர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.

குன்றக்குடிக்கு வருகை தந்த மதுரை ஆதீனம் யானையின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதன் பின்பு மறைந்த யானை சுப்புலட்சுமி  கிரைன் மூலம் தூக்கப்பட்டு  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டு   இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பின் தொடர்ந்து சென்றனர். காரைக்குடி மதுரை சாலையில்  யானை சுப்புலட்சுமி உடல் கால்நடை மருத்துவ குழுவால் உடல் கூறு ஆய்வுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதே போல பழனியில் தனியாருக்கு சொந்தமான கோவில் யானை சரஸ்வதி உடல்நல குறைவால் இறந்ததால் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்  தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில் யானை கஸ்தூரி மற்றும் தனியார் கோவிலுக்கு சொந்தமான சரஸ்வதி (67) என்ற இரண்டு பெண் யானைகள் பழனி பகுதிகளில் பக்தர்களுக்கு மிகவும் செல்லப்பிள்ளைகளாக உலா வந்தன. தனியார் வன்னி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான வாளகத்தில் வைத்து பராமரிக்கபட்டு வந்தது. சரஸ்வதி யானை 2800 கிலோ எடை இருந்தது. உடல் எடை அதிகரிப்பு, கடந்த 6 மாதங்களாக எலும்பு தேய்மானம் ,மூட்டு பிரச்சனை,வயது மூப்பு காரணமாக காலில் காயங்களுடன் சரஸ்வதி யானை நடக்க முடியாமல் சிரமப்பட்டது.

அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனச்சரக மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் நேற்றிரவு சரஸ்வதி யானையானது சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தது.யானையின் மரணம் பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வன்னி விநயாகர் கோவில் வளாகத்தில் இறுதி சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்றது. அப்போது பலரும்  சரசு... தங்க புள்ளை... என்று கூப்பிடவுடன் நின்று கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடும் இப்படி போய்ட்டியே என கண்ணீர் விட்டு கதறினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow